Saturday, February 2, 2008

A Long Day..... (Part – 2)

ஒவ்வொருவராகச் சென்று குளித்து முடித்துவிட்டு உடை அணிந்து ரெடியானோம். மணி 08:15.

சந்துரு மீண்டும் ஒரு முறை முதல் 3 யூனிட்டில் வரும் கேள்விகளை சொல்லிக் கொடுத்தான். எல்லோரும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தோம்.

(அதென்னவோ தெரியவில்லை, வகுப்பறையில் இருக்கும் போது பாடம் கவனிக்கத் தோனுவதேயில்லை. கண்ணும் கவனமும் வேறு பக்கம் தான் இருக்கிறது. ஆனால் நம்ம பய எவனாவது சொல்லிக் கொடுத்தா நல்லா புரியுது)

3 யூனிட்டும் முடிந்த போது மணி 08:40 ஆகியிருந்தது. நம்முடைய சுந்தரனார் பல்கலைகழகத்தில் அது ஒரு நல்ல விஷயம். எதாவது 3 யூனிட் மட்டும் நன்றாகப் படித்தால் போதும், மற்ற 2 யூனிட்டையும் சும்ம பாத்துட்டுப் போனாலே போதும் எளிதில் நல்ல மதிப்பெண் பெறலாம். அதனால் தான் சந்துரு சொல்லிக் கொடுக்கும் போது அத்தனை கவனம்!!.

அது போல சந்துருவும் பொறுமையாக எல்லாம் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் படித்து அரியர்ஸ் தூக்கினவங்க நெறைய பேரு.

08:50க்கு செந்தூர் எக்ஸ்ப்ரெஸ் வந்து விடும். ஓட்டமும் நடையுமாய் அந்த அக்ரஹாரத் தெருவுக்கு அருகில் இருந்த ஸ்டாப்பில் நின்று கொண்டு தெருப் பக்கமாய் கண்களை தவழ விட்டோம்.

(சே! இன்னிக்குப் பாத்து எவளையும் காணோம்...)

செந்தூர் எக்ஸ்ப்ரெஸ் வந்தது. உள்ளே அமர்ந்தோம்.
கல்லூரி ஸ்டாப்பில் போய் இறங்கிய போது மணி 09:00
எங்களுக்கு 10:00 மணிக்குத் தான் தேர்வு.

"சரிடா நான் HoD-யப் பாத்துட்டு வர்றேன்டா, அவருகிட்ட இந்த இன்டர்வியூ ஆர்டரக் காமிச்சுட்டு, இதுல ரெஃபெரென்ஸ் கையெழுத்து வாங்கிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு துறைத்தலைவர் அறையை நோக்கிப் போனேன்.


என்னுடைய ராசிப்படி அவர் அறையில் இருக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டே போனேன். ராசி சரியாக வேலை செய்தது. அவர் இல்லை. டிப்பார்ட்மென்டில் விசாரித்த போது ராசி சற்று பலமாகவே வேலை செய்தது புரிந்தது. இன்னும் ரெண்டு நாளைக்கு அவர் வரமாட்டார். சரி, அவர் வீட்டுக்கே போக வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன்.


அவருடைய அறையை விட்டு வெளியே வந்தேன். இதயம் படபடத்தது. அவள் தான் வந்து கொண்டிருந்தாள். என்னைக் கடந்து போனாள். கடந்த போது என்னைப் பார்த்தாளா அல்லது எனக்குத் தான் அப்படித் தோன்றியதா தெரியவில்லை.


சரி, அவளை நிறுத்தி நான் அந்தப் பொதுத் துறை நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றதையும் இன்டர்வியூ-வுக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் சொல்லலாம் என்று நினைத்தேன். ஏதோ ஒன்று தடுத்தது.


என்னுடைய வெற்றி நல்ல செய்தி தான் என்றாலும், நான் போய்ச் சொன்னால் அவளிடம் என்ன மாதிரியான ரியாக்ஷன் இருக்கும் என்று தெரியவில்லை. வேண்டாம், பேசியே கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவடுத்தேன். அதற்குள் அவள் வெகு தூரம் போயிருந்தாள்.


என்னை விட்டும் தான்....



தூரத்தில் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த
என்னுடைய தோளைப் பற்றி யாரோ திருப்பியது போல் இருந்தது.

யாரென்று பார்க்கத் திரும்பினேன். காளி நின்றிருந்தான். "ஏன்டா அவளையே எரிக்கிற மாதிரி பாத்துக்கிட்டு இருக்க, நீ சாதாரணமா பாத்தாலே பயமாத்தான் இருக்கும், நீ ரொமான்டிக்கா பாக்கிறதா நெனச்சிட்டுப் பாத்தா இன்னும் கொடூரமா இருக்கும். இப்ப நீ பாக்கிற பார்வை இருக்கே அது கொலகாரப் பார்வை. நல்ல வேளை, அவ ஒன்னப் பாக்கல" என்றான்.

"ஏன்டா இப்படி?? மூச்சு வுடாம ஓட்டுற, நான் என்னடா பண்ணுவேன்? என்னோட மூஞ்சி அப்படி, கண்ணும் எப்பவும் செவந்து தான் இருக்கு. சரி வா எக்ஸாம் ஹாலுக்குப் போகலாம், இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு" என்று சொல்லிவிட்டு சிவில் டிப்பார்ட்மென்ட் நோக்கி நடந்தோம்.

அன்று எங்களுக்கும், ECE டிப்பார்ட்மென்ட்டுக்கும் மட்டும் தான் தேர்வு. நாளை மறு நாள் தான் Mech-ம் CSE-யும் தேர்வு எழுதுகிறார்கள்.


இருந்தாலும் எல்லாருமே கல்லூரிக்கு வந்திருந்தனர். தேவ், செல்வன் இருவரும் எதிரில் வந்து கொண்டிருந்தனர். என்னையும் காளியையும் பார்த்து விட்டு சிரித்தனர். எங்கள் நால்வருக்குள்ளும் எப்பவுமே ஒரு ஆரோக்கியமான போட்டி உண்டு.

யார் அதிகக் கருப்பு என்பதில் தான் அந்தப் போட்டி???!!!. பெரும்பாலும் போட்டி ட்ராவில் தான் முடியும். எங்களைக் கடந்து சென்ற கந்தசாமி "என்னடா கருப்பர்கள் மாநாடா?" என்று சொன்ன கமென்ட் எங்கள் காதில் விழுந்தது.


ஏனோ நாங்கள் சேர்ந்து (செல்வன் தவிர்த்து) ஃபர்ஸ்ட் இயர் ஹாஸ்டலில் அட்டென்ட் செய்த 13 என்கொயரியும் நினைவுக்கு வந்தது.


"இன்று எங்களுடன் VAN-ல திருநெல்வேலி வரை வர்றியா? இன்னிக்கு நீ கண்டிப்பா திருநெல்வேலி போவன்னு எனக்குத் தெரியும் "தேவா கேட்டான்.


"நான் பாளைய்ங்கோட்டைக்கு போகனும்டா, ஆனா நீ நெனைக்குற காரணம் இல்ல" என்றேன்.

அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

நடக்கும் போது பழைய வேன் வாழ்க்கை நினைவு வந்தது.

மாலையில் திருச்செந்தூரிலிருந்து திருவைகுண்டம் வரை வேனில் போய்விட்டு பின் அங்கிருந்து வேனில் யாரிடமாவது பைசா கடன் வாங்கி திருச்செந்தூருக்குத் திரும்பி விடுதிக்கு வந்த பழைய ஞாபகம் வந்தது.

அவள் முகத்தை அரை மணி நேரம் பார்ப்பதற்கு ஒரு மணி நேரப் பயணம்!!!.


எல்லாமே முடிந்து விட்டது....

ஒரு உலர்ந்த புன்னகையுடன் தேர்வு அறையை நோக்கிச் சென்றேன்.
மணி 09:55

பாகம் மூன்றில் தொடரும்.....
என் வாழ்வின் மிக நீளமான நாள்.... (பாகம் - 2

1 comment:

raji said...

hello anna
nanum unga kalarthan
eppa unga part 3 varum
karuppu raji