கறுவாப்பயலும் நேர்காணலும்...
2004-ம் ஆண்டில் ஜூன் திங்களின் ஏதோ ஒரு நாள். கறுவாப்பயலாகிய நான் வேளச்சேரியில் ஒரு அறையில் தங்கியிருந்து கடுமையாக வேலை தேடிக் கொண்டிருந்த காலம். காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் விட்டுக் கொண்டு நம்ம பயபுள்ளைகளை எழுப்பி விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தேநீர்க் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது ஆனந்த் அமைதியான குரலில் கேட்டான். "டேய் ஒனக்கு இன்டர்வியூ எத்தனை மணிக்குடா?"
"ஒன்னே கால் மணிக்குத் தான்டா.."
"ஒன்னும் பெரிய விஷயம்லாம் இல்லடா, ஒரு பொய்ய சொல்லிட்டு அத கடைசி வரைக்கும் காப்பாத்தினாப் போதும்" என்று இன்டர்வியூ டிப்ஸ்களை அள்ளித் தெளித்தான்.
"சரி, எல்லா சர்ட்டிஃபிகேட்டும் இருக்காடா" என்றான்.
அவன் கேட்பதும் சரி தான். ஏனென்றால் கடந்த முறை சென்ற நேர்காணலின் போது நான் என்னுடைய கல்லூரி மதிப்பெண் பட்டியல் தொலைந்து விட்டதாகச் சொல்லித் தான் அட்டென்ட் செய்தேன்.
பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் காரணம் இல்ல. கல்லூரியில ஏழாவது செமஸ்டர் தேர்வின் போது ஒரு செய்முறைத் தேர்வு விழுந்து விட்டது (அல்லது கல்லூரி மொழியில் சொல்வதென்றால் LAB-ல ஆப்பு வச்சுட்டாங்க...)
எட்டாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் அப்போது வந்திருக்கவில்லை. லேப் தேர்வில் ஊத்தியதைக் காட்ட வேண்டாம் என்பதற்காக மதிப்பெண் பட்டியல் தொலைந்து விட்டதாகப் பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது.
ஆனால் கடந்த வாரம் வந்த தேர்வு முடிவில் எல்லாம் பாஸ் ஆகி 69.67% மதிப்பெண் பெற்றிருந்தேன். தூத்துக்குடியிலிருந்து நன்பன் ஜமீல் உசேன் என்னுடைய மதிப்பெண் பட்டியலைக் கொண்டு வந்திருந்தான். அவன் CLRI அருகில் தங்கியிருந்தான்.
நினைவு வந்தவனாக தேநீர் குடித்துவிட்டு ஜமீலின் அலைபேசி எண்ணை அழைத்தேன். சரியாக் 10 மணிக்கு வேளச்சேரி வந்து என்னிடம் மதிப்பெண் பட்டியலைத் தருமாறு சொன்னேன்.
அவனும் வருவதாக ஒப்புக்கொள்ளவே வீட்டுக்குச் சென்றோம். நான் நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நிறுவனம் துரைப்பாக்கத்தில் இருப்பதால் பிரச்சினை இல்லை. குறைந்த தொலைவு தான் போக வேண்டியிருக்கும்.
மணி பத்தரை ஆகியும் ஜமீல் வரவில்லை.
எனக்கோ டென்ஷன் எகிறிக்கொண்டிருந்தது. வெளியே போய் PCO-வில் சென்று அவனை அழைத்தேன்.
“டேய் சீக்கிரம் வாடா” என்று சொன்னேன்.
அவனோ படு கேஷுவலாக எனக்கு ஒடம்பு சரியில்லை நீ இங்கு வந்து வாங்கிட்டுப்போ என்றான்.
அடச் சண்டாளா! சதிகாரா!
என்று மனதிற்குள் பாராட்டிவிட்டு விரைவாக வீட்டிற்குச் சென்று குளித்து முடித்து ரெடியாகி வீட்டை விட்டு வெளியே வந்த போது மணி 11:15. இன்னும் ஒன்றேமுக்கால் மணி நேரத்தில் CLRI சென்று அவனிடம் மதிப்பெண் பட்டியல் வாங்கிவிட்டு, அதை நகல் எடுத்து விட்டு அடையாறு வழியாக ஒரு மணிக்குள் துரைப்பாக்கம் செல்ல வேண்டும்.
கிடைத்த பேருந்தைப் பிடித்து CLRI-யில் இறங்கி அந்த நாய் சொன்ன முகவரியைத் தேடிக் கண்டுபிடித்த போது மணி 12:05 ஆகியிருந்தது. CLRI பேருந்து நிலையத்திற்காவது வந்து Mark Sheet-க் குடுடா, எனக்கு நேரம் மிச்சமாகும் என்று சொன்னதைக்கூட பொருட்படுத்தாமல் என்னை அலைய வைத்த அவனது நட்பை நினைத்துப் புல்லரித்தது.
அவனிடம் Mark Sheet வாங்கி விட்டு நான் கற்று வைத்திருந்த அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் அவனை வாழ்த்திவிட்டு வெளியேறினேன்.
கிடைத்த ஆட்டோவைப்பிடித்து அடையாறு பேருந்து நிலையம் சென்றேன். அப்போதெல்லாம் எங்களுக்கு ஆட்டோவில் போவது ஆடம்பரம் (அது அவசியமாகவே இருந்தாலும்.. எக்கானமி ஒத்துழைக்கவில்லை....)
சரியாக 12:40க்கு துரைப்பாக்கத்தை அடைந்தேன். அப்போது தான் நினைவு வந்தது. அவசரத்தில் மதிப்பெண் பட்டியலை நகல் எடுக்க மறந்து விட்டேன்.
சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்த நிறுவனத்திற்கு அருகில் எங்கேயும் கடையே இல்லை.
அது சரி, இப்போ எல்லா சாப்ட்வேர் நிறுவனமும் காட்டுக்குள் தானே கட்டுகிறார்கள்.
நல்ல வேளை பேருந்து வந்தது. வந்த வழியிலேயே பயணித்து கடைகளாகத் தென்பட்ட நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். மணி 12:50 ஆகியிருந்தது. நல்ல வேளை நகலெடுக்கும் கடையும் இருந்தது. நிம்மதியுடன் உள்ளே சென்றேன்.
ஆனால்…..
விதி விடாமல் துரத்தியது புரிந்தது.
அந்தக்கடையில் மின்சாரம் இல்லை. அந்த ஏரியாவிலும் தான்.... வழியில் வந்த ஒரு பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொண்டேன்.
அங்கிருந்து ஒரு 4 கி.மீ போயிருப்போம். ஒரு கடையில் மின்சாரம் இருந்தது. அவரிடம் நன்றி கூறி விட்டு இறங்கி கடையை நோக்கி ஓடினேன்.
நல்ல வேளை நகலெடுக்கும் கருவி ஒழுங்காக வேலை செய்தது. நகலெடுத்து பணம் கொடுத்து விட்டு எதிர் சாலையில் சென்று இன்னொரு பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறினேன். அந்த நிறுவனத்தின் முன்பாக இறங்கி உள்ளே சென்ற போது மணி 1:07 ஆகியிருந்தது.
அங்கு வெளியே நின்றிருந்த சிலர் மெதுவாக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். நல்ல வேளை எல்லாரும் உள்ளே போகும் முன் வந்து சேர்ந்தாயிற்று என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த நிறுவனத்திற்குள் சென்றேன்.
இப்போது தான் க்ளைமேக்ஸ் ஆன்ட்டி க்ளைமேக்ஸாகவும் அங்கிள் க்ளைமேக்ஸாகவும் மாறியது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடோடி வந்தா அந்தப்பாவிங்க என்ன இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டபோது மணி 5:10.
நாலு மணி நேரம் சும்மா இருந்தேன்.
அத விட மோசமான க்ளைமேக்ஸ் என்னான்னா அந்த நிறுவனத்திலேயே எனக்கு வேலையும் கிடைத்தது.
ஆனால் வேலைக்குச் சேர்ந்த 19 நாட்களிலேயே வேலையை விட்டு வெளியேறி வேறொரு இந்திய அரசு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது தான் உச்சபட்ச முரண் நகை.