Thursday, March 13, 2008

A Long Day - 5

என் வாழ்வின் மிக நீளமான நாள் -5


பேருந்து சோனகன்விளையைத் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. என் மனம் பல்வேறு உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பாதையில் நெல்லை செல்வது இதுவே கடைசி நாள்.

இன்னும் நாற்பத்தைந்து நிமிடத்தில் அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறேன்; என்றுமே பார்க்க முடியாது என்ற எண்ணமும் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியிருந்தது.

பக்கவாட்டில் பார்க்கும் போது அவளுடைய கம்மல் தெரிந்தது. சற்றெ பெரிய புள்ளியைப் போல காதில் ஒட்டிக்கொண்டு இருந்தது. புதியது என்று நினைக்கிறேன்.

முன்பு வேறொன்று இருந்தது. சற்று நீளமாக "பென்டன்ட்" மாடலில் இருந்தது.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன் ஏதோ ஒரு நாளில் என் வகுப்பறையில் ஏதோ ஒரு மொக்கை லெக்சரின் போது, வகுப்பை மும்முரமாகக் கவனிக்கும் சாக்கில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

நானும் எப்பவும் போல் வகுப்பைக் கவனிப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கடமையே கண்ணாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் ஆள்காட்டி விரல் மட்டும் தொங்கிக் கொண்டிருந்த காதனியை தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு முறை தட்டும் போதும் அவளுடைய காதனி ஊசலாடிக் கொண்டிருந்தது, அவளுடைய காதனிக்குத் துனையாக என் உள்ளமும் கூட.......

எதேச்சையாக் பேருந்து நடத்துனரைத் தேடுவது போல அவள் திரும்பிப் பார்க்க, என் நினைவலைகள் பாதியிலேயே அறுந்து போனது.

இருவர் விழிகளும் மீண்டும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாள். இங்கேயும் வந்து விட்டான் என்று நினைப்பாளோ? தெரியவில்லை.

எனக்கு வருத்தமில்லை. ஏனெனில் இதற்கு முன்பு அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே பலமுறை நெல்லை சென்றிருக்கிறேன்.

ஏன் சென்றேன்?

ஏன் அவளிடம் அந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டேன்?

அவளுடைய முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டியது எது?

விடை தெரியவில்லை;

தெரிந்தால் அது காதலும் இல்லை.

சிறிது நேரத்தில் அவளுடைய நிறுத்தம் வந்தது. அவளுடைய முகத்தைப் பார்க்கக் கூடாது!

என்றைக்குமே...

அறிவு கட்டளையிட்டது.
ஆனால் உள்ளமோ, இறங்கிப் போகும் முன் ஒரே ஒரு முறை திரும்பிப் பார் என்று அவளிடம் கெஞ்சியது.

என் அறிவு என் உள்ளத்திடம் தோற்றது,

என் உள்ளம் அவளிடம் தோற்றது.

ஆம் அவள் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. அப்படியே இறங்கிச் சென்றாள். (ஏன்டா திரும்பிப் பாக்குற மாதிரியா ஒம்மூஞ்சி இருக்கு? “பாவம்டா அந்தப்புள்ள” என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது)

இருப்பினும் அவளை அறியாமல் அவள் எனக்கு விட்டுச் சென்ற சில நல்ல விஷயங்களும் இருந்தன.

நிராகரிக்கப் படுவதன் வலி எப்படி இருக்கும் என்று எனக்குக் உணர வைத்திருந்தாள் (கற்றுத்தந்திருந்தாள்).

இனி வாழ்வின் எந்த ஒரு தோல்வியும், எந்த இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டாலும் அது எனக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. வாழ்வின் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் எனக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள். மேலும் என்னுடைய ஈ-மெயிலுக்கு Password-ம் தந்துவிட்டுப் போயிருக்கிறாள்.
நன்றி பெண்ணே!

சிறிது நேரத்தில் எங்கள் பேருந்து பாளை பேருந்து நிலையத்தைக் கடந்து மத்திய சிறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இடதுபுறம் திரும்பி சிறைச் சாலையைப் பார்த்தேன்.

நெஞ்சில் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போல உணர்ந்தேன். ஒரு பெருமூச்சுடன் அதைக் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்தது.

சரியாக 40 நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்தது, ரெஃபெரென்ஸ் கையொப்பம் வாங்கியாகி விட்டது. நேர்முகத்தேர்வுக்கான சில அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு நடந்து வந்து பேருந்து நிலையத்தை அடைந்த போது மணி 19:40.

திருச்செந்தூருக்கான அடுத்த பேருந்து இன்னும் 15 நிமிடத்தில் கிளம்பும். அருகிலிருந்த ஒரு STD பூத்தில் சென்று 91461 23......

ஜான் தான் எடுத்தான். டேய் தங்கச்சி அங்கே வந்தாளா? என்று கேட்டேன்...... STD பில்ரு. 6.50-ஐத் தாண்டுவதற்குள் பேச வேண்டியதைப் பேசி முடித்தேன். இல்லையென்றால் திருச்செந்தூர் செல்ல முடியாது.

பேசி முடித்து வெளியே வந்த போது இதுவரை உடலில் இருந்த துறுதுறுப்பு மறைந்திருந்தது. உடலும் உள்ளமும் துவண்ட நிலையில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் சந்தேகப்பட்டது சரி தான். என் தங்கை காலையில் சொன்னது போல அந்த Rs.1000 கொடுத்தது தந்தை இல்லை.

என் தங்கை தான் அவளுடைய காதனியை அடகு வைத்துக் கொடுத்திருக்கிறாள்.

ஒரு விநாடியில் என் காதலியின் கம்மல் என் கண்களிலிருந்து மறைந்து என் தங்கையின் முகம் நினைவுக்கு வந்தது. ஏன் இப்படிச் செய்கிறாள். பணம் வேண்டுமானால் என் நன்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் தானே.
இவள் ஏன்?

ஏற்கனவே தன்னுடைய செயினை அடகு வைத்துத் தான் இந்த ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணத்தை செலுத்த வைத்தாள். இப்போது கம்மலும் போய் விட்டது.

பாவம் இவளே இறால் பண்ணை, STD பூத் என்று பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். வாங்கிய சம்பளத்தை அப்படியே எனக்குக் கொடுத்து விடுகிறாள்.

என் தங்கையே எனக்கு அம்மாவாக இருந்திருக்கலாம். இனிமேல் அவளைக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உள்ளத்தில் உறுதி பூண்டேன். பேருந்து மெதுவாக ஊர்ந்து பாளை மத்திய சிறையை நெருங்கிய போது உள்ளம் மேலும் கணத்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எடுத்துக் கொண்ட உறுதி என் நினைவுக்கு வந்தது,

"ஒரு நல்ல அண்ணனாக நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாக நான் வெற்றி பெற்றே ஆக வேண்டும்; ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாகவும் ஒரு நல்ல அண்ணனாகவும் நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு காதலனாகத் தோற்பதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன்."

பேருந்து வேகமெடுத்தது. காலை 5:30 மணியிலிருந்து இப்போது வரையில் உடலில் ஓய்வு இல்லாமையாலும், கடைசி ஒரு மணி நேரம் உள்ளத்தில் ஏற்பட்ட அயற்சியும் பேருந்திலேயே என்னைத் தூங்க வைத்தது.

திருச்செந்தூர் வந்து சேர்ந்த போது மணி 21:35. என்னுடைய அறையை நோக்கி நடந்தேன். என்னுடைய அறையை நெருந்க்கிய போது நன்பர்கள் எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
பலர் மூட்டை முடிச்சுகளோடு.

திருச்செந்தூரில் எங்களுக்கு கடைசி இரவு. கோயில் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏற்றி விட்டோம்.
திருச்சி, நாமக்கல், சேலம், பந்தல்குடி என்று ஒவ்வொரு ஊருக்குப் போகிற நன்பர்களையும் ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தோம்.

"மறக்காம ஃபோன் பண்ணுடா",

“ ஈ-மெயில் அனுப்புடா",
"எப்பவும் போல என்னோட ஃபோன் நம்பரையும் தொலைச்சுறாதடா",
"அப்பா அம்மாவக் கேட்டதாச் சொல்லுடா",
"மாப்ள, அவ ஒங்க ஊரு தானே, அவ சென்னை கிளம்பினா, எனக்கு ஃபோன் பண்ணுடா",
"அடுத்த மாசம் பெங்களூர் போகும் போது என் கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டுப் போடா" என்பன போன்ற அக்கறையான குரல்கள் ஒலித்தன.

அவ்வப்போது கண்டக்டருக்குக் கேட்கும் குரலில் , "நன்பா, மத்த பஸ் மாதிரி இதுலேயும் டிக்கட் எடுக்காமப் போகனும்னு நெனைக்காதடா, இந்தக் கண்டக்டரு கொஞ்சம் வெவரமான ஆளு." என்றும் கண்டக்டரிடம் நேராகவே சென்று, " சார், பையன் டிக்கட் எப்பவும் எடுக்க மாட்டான், மறக்காம நீங்களே கேட்டு வாங்கிடுங்க" என்று எங்க பயலையும் கண்டக்டரையும் சேர்த்துக் கலாய்ப்பதுமாய் ஒரு வழியாய் வழி அனுப்பு வைபவம் முடிந்த போது மணி 00:35 ஆகியிருந்தது.

நான், சந்துரு, ப்ரேமானந்த், ராமலிங்கம் நால்வரும் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து பேசி விட்டு அறைக்குத் திரும்பிய போது மணி 01:55 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர்.

ஜான் ஃபோனில் சொன்ன செய்தியை சந்துருவிடம் சொன்னேன், என்னுடைய உறுதிமொழியையும் அவனிடம் சொன்னேன்.
"ஏற்கனவே ஒரு காதலனாய்த் தோற்று விட்டேன்டா" என்றேன்.

"நிச்சயம் ஒரு அண்ணாகவும் ஒரு ப்ரொஃபஷனலாகவும் வெற்றி பெறுவாய்" என்றான் என் நன்பன். தூக்கம் மெதுவாகக் கண்களைத் தழுவியது.

முற்றும்...

பின்னுரை:2009-ல் ஏதோ ஒரு நாள்.

முத்துவேல் தன்னுடைய 2004-ம் ஆண்டு டைரியை ஒரு பெருமூச்சுடன் மூடி வைத்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துத் துடைத்து சூட்கேசுக்குள் வைத்தான்.

2004-ம் ஆண்டின் இறுதியில் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து போன அவனுடைய அருமைத்தங்கையின் புகைப்படம் தான் அது.

கையில் இருந்த ஃப்ளைட் டிக்கட்டை நோக்கினான். நாளை மாலைக்குள் உ.பி-யிலுள்ள நரோரா அனுமின் நிலையத்திற்குச் சென்று அந்த டர்பைன் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பது அவனுக்கு இடப்பட்ட கட்டளை. முத்துவேல் தன்னுடைய சூட்கேசை எடுத்துக் கொண்டு வலியைச் சுமந்த நெஞ்சோடு கிளம்பினான்.

Monday, March 3, 2008

A Long Day - Part 4

என் வாழ்வின் மிக நீளமான நாள் -4

கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து இதயம் படபடக்க என்னுடைய டிப்பார்ட்மென்ட்டை நோக்கிப் போகும் போதே அவனிடம் கேட்டேன், "அவ கூப்பிட்டதா உனக்கு யாரு சொன்னாடா?"
அவனுடைய பதில் உடனே வந்தது, "நம்ம ப்ரொஃபசர் தான்டா"

உடனே எனக்குப் பாதி புரிந்து விட்டது. அவள் என்னிடம் பேச விரும்புவதே "Next to Impossible". அப்படியே அந்த .001% Probablityப்படி அது நடந்தாலும் அவள் நம்ம ப்ரொஃபசரிடம் சொல்லி என்னை அழைக்கச் சொல்வது நடக்கவே நடக்காது.

சரி. சொல்ல மறந்து விட்டேன். பொதுவா ஒவ்வொரு க்ளாஸ்லேயும் ஒரு பய அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு, வாத்தியாருங்க குடுக்குற மொக்க அஸைன்மென்ட்டையும் கூட கண்ணும் கருத்துமா செஞ்சு குடுத்து, நம்மள மாதிரி பசங்க கிட்ட வாத்தியார் இருக்கும் போது ஒட்டியும் ஒட்டாமப் பேசிக்கிட்டு, எதுக்கு எடுத்தாலும் அட்வைஸ் பண்ணிக்கிட்டு ஒருத்தன் இருப்பான் இல்லையா? அந்த மாதிரி என்னோட க்ளாஸ்லேயும் ஒரு நாறப்பய உண்டு. அவனத் தான் நாங்க ப்ரொஃபசர்-ன்னு பேரு வச்சுக் கூப்பிடுவோம்.

எங்கள் ப்ளாக் வாசலிலேயே அந்தப் பய என்னை எதிர்பார்த்துக்கிட்டு நிக்கிற மாதிரி ஒரு பில்ட்-அப் குடுத்துக்கிட்டு நின்று கொண்டிருந்தான். "டேய் இவன் சொல்லுறது உண்மையாடா? அவ என்ன வரச் சொன்னாளா?" மூச்சு விடாமக் கேள்வி கேட்டேன்.

அதுக்கு அந்த நாதாரி நாயி படு கேசுவலா சொன்னான், " இல்ல மாம்ஸ், நம்ம செல்வி தான்டா ஒன்னோட ஆட்டோக்ராஃப் புக்கத் திருப்பிக் குடுக்க ஒன்ன வரச் சொன்னா, நம்ம பசங்க கிட்ட ஒன்ன எங்கேன்னு கேட்டேன். ஒரு பய கண்டுக்கல, அதான் அத்தை கூப்புடுறான்னு ஒரு பொய்யச் சொன்னேன், பாத்தா ரெண்டு நிமிஷத்துல நீ இங்க வந்து நிக்குற, செல்வி நம்ம பவர் எலக்ட்ரானிக்ஸ் லேப்-ல இருக்காளாம், போ" என்று சொன்னான்.

"போடாங்...... " என்று தூத்துக்குடிக்கும் விளாத்திகுளத்திற்கும் இடையே உள்ளதும் எனைப் பெற்றெடுத்ததுமான அந்தப் பட்டிக்காட்டு கிராமம் எனக்குக் கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை அவனை நோக்கிக் கூறி விட்டு பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகம் நோக்கிப் போனேன்.

செல்வி இருந்தாள். அவளிடம் எனது ஆட்டோக்ராஃப் புக்கைப் பெற்றுக் கொண்டேன். செல்வி அவளின் நெருங்கிய தோழி. நான் அவளிடம் விடை பெற்று வெளியே வந்தேன். என்னுடைய வகுப்பறை நோக்கிச் சென்றேன். ஏதோ ஒன்று உறுத்த திரும்பிப் பார்த்தேன். லேபிலிருந்து செல்வியும் அவளும் போய்க்கொண்டிருந்தனர். இவள் எங்கே இருந்தாள்?

மெதுவாக நடந்து சென்று மேலே ECE டிப்பார்ட்மென்ட் செல்லும் படிக்கட்டில் அமர்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்தப் படிக்கட்டு தான் எனக்குப் பாதி நேரம் க்ளாஸ் பெஞ்ச்.

இரண்டாமாண்டில் எங்கள் டிப்பார்ட்மென்ட்டுக்கு வந்த போது கீழ் தளம் EEE-க்கும் மேல் தளம் CSE மற்றும் ECE வகுப்புமாய் இருந்தது. அந்தப் படிக்கட்டு எங்கள் ப்ளாக்கின் வாசலை எதிர்நோக்கி இருந்தது. யார் உள்ளே வந்தாலும் அந்தப் படிக்கட்டைக் கடந்து ஆக வேண்டும். மொத்தத்தில் மூன்று டிப்பார்ட்ம்ர்ன்டின் மூன்று ஆண்டு ஃபிகர்களையும் ஒரே இடத்தில் இருந்த படியே பார்ப்பதற்கு ஏற்றபடி வாஸ்த்து பார்த்துக் கட்டப்பட்ட படிக்கட்டு.

மூன்று ஆண்டுகளாக நானும் எனது நன்பர்களும் அங்கு அமர்ந்து ஜூனியர், சீனியர் பாகுபாடு இல்லாமல் சைட் அடிக்குறது, கமென்ட் அடிக்குறது, நம்ம பயலுவ எவனாவது ஒருத்தனோட ஆளு போனா அவன நல்லா அவ முன்னடியே கிண்டல் பண்ணி அழ வைக்குறது மாதிரி கடமைகளைக் கண்ணும் கருத்துமா செஞ்சுக்கிட்டிருந்த இடம் அது. அதை விட்டுப் பிரியப் போகுற வருத்தத்தில் அதன் மீது சாய்ந்து அமர்ந்தேன். சிறிது நேரத்தில் என்னொட நன்பர்களும் ஜூனியர் பசங்களும் வந்து ஒருவர் மடிய்ல் ஒருவர் சாய்ந்து அமர்வது மாதிரி சிறிது நேரம் இருந்தோம். வசந்த கால வாழ்வின் கடைசி நிமிடங்கள்.

அப்போது ப்ரிசில்லா அங்கு வந்தாள். வந்ததும் சந்துருவிடம் கேட்ட முதல் கேள்வி இது தான்:
“ப்ரேமானந்த் எங்கே? “
சந்துருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீ இன்று மதியம் முதல் இப்போ வரை இந்தக் கேள்வியை 8 முறை கேட்டு விட்டாய். அவனை நான் பாக்கவே இல்லை" என்று பதில் சொன்னான்.

அவள் போன பின்னர் படிக்கட்டு பாய்ஸ் எல்லோரும் அவனிடம் கேட்டோம், "என்னவான்டா, அவ ஏன் ப்ரேம்-மத் தேடுறாளாம்"?

சந்துரு, "கடைசி நாள் இல்லையா, அதான் தேடுறா"

"சரி இந்த நாயி எங்க போச்சு?"

"இல்ல மாப்ள, இவ கண்ணுல படக் கூடாது-ன்னு அந்தப் பய எஸ்கேப் ஆகி வேன் ஸ்டான்டுக்குப் போயிட்டான்"

"ஏன்டா, நம்ம பயலுக்கும் தான் அவளைப் புடிக்கும் தானே?" "ஆமாடா, ஆனா கடைசி நாள் இல்லையா, அவளப் பிரியப் போறது அவனுக்குக் கஷ்டமாயிருக்கலாம், அதனால அவன் ஒதுங்கியிருக்கலாம், அவ எழுதிக் குடுத்த ஆட்டோக்ராஃப் நோட்டப் படிச்சுட்டு நேத்து நைட்டு அந்த நாயி அவனும் தூங்காம, அவனோட ரூம் மேட்ஸையும் தூங்க விடாம இம்சை பண்ணியிருக்கான்"

"இது என்னடா கொடுமையா இருக்கு, நைட்டு முழுக்க அவளை நெனச்சு உருகுறது, பகல்ல நம்ம கிட்ட பேசும் போது, அவள கண்டுக்கவே மாட்டேன் மாப்ள-ன்னு நம்ம கிட்ட டையலாக் வேற உடுறான்"

"அதில்ல மாமா, அவன ரொம்பக் கேஷுவலான ஆளுன்னு எல்லாரும் நெனைக்குறோம் இல்லையா, அதையே கவரா வச்சு, அவனோட ஆளப்பத்திப் பேசும் போதெல்லாம் சமாளிச்சுக்கிட்டிருக்கான்டா இவன்"
"ஏன்டா அவன் அவளை விரும்பினா நாம என்னடா செய்யப்போறோம்?"

"நாம ஒன்னும் செய்ய மாட்டோம், அவ கிட்ட வரும் போது லைட்டா ஓட்டுவோம், அவனும் பல பேர ஓட்டியிருக்கான், அதனால தான் அவளக் கண்டுக்காத மாதிரி நம்ம கிட்ட நடிக்கிறான். மத்தபடி தனிமையில இருக்கும் போது அவள நெனச்சு உருகுறான்"

"சரி வுடு, இன்னிக்கு நைட்டு நம்ம ரூமுக்கு வருவான்ல அப்பப் பாத்துக்கலாம்" நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் படிக்கட்டில் ஒரு அசாத்திய மௌனம் நிலவியது.

மற்ற பசங்களெல்லம் கப், சிப் பென்று அமைதியாக, இடது புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே மேகா நின்றிருந்தாள். ஒரு 10 வினாடிகள் அமைதி நீடித்தது. பின்னர் அவளே அந்த சூழ்நிலையின் அமைதியை உடைத்தாள். சந்துருவை நோக்கி,"உன்னிடம் பேச வேண்டும்" என்றாள்.

சந்துரு அமைதியாக எழுந்து சென்றான். இருவரும் அருகில் இருந்த வகுப்பறையை நோக்கிச் சென்றனர். சந்துரு முதலாம் ஆண்டு சேர்ந்து சில நாட்களிலேயே அவளிடம் தனது காதலைத் தெரியப்படுத்தியிருந்தான். ஆனால் அவளும் எல்லா ஃபிகர்களையும் மாதிரி கேஷுவலாக நிராகரித்து விட்டாள். அடுத்த மூன்று ஆண்டுகள் இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை.
வகுப்பறை கிட்டத்தட்ட ஒரு நரகம் போலத் தான் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் நன்பர்களுடன் சேர்ந்தே இருந்ததால் அவனுக்கு அந்த வலி தெரியவில்லை.

ஆனால் அவன் இதுநாள் வரை மற்ற எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. சிறிது நேரத்தில் சந்துரு திரும்பி வந்து படிக்கட்டில் என் மடியில் அமர்ந்தான். அவள் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது தலையில் அடித்துக் கொண்டு வந்ததையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். "ஒன்னும் இல்ல மாப்ள, எப்பவும் போல நன் ஒன்னோட மனசப் புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சுடு, நாம நன்பர்களாவே பிரிவோம்-னாடா"

"அதுக்கு நீ என்ன சொன்னடா?"

"நான் என்ன சொல்ல, உன்ன எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு-ன்னு உண்மையச் சொன்னேன், பதிலுக்கு அவ ஒன்னத் திருத்தவே முடியாது-ன்னு சொல்லிட்டுப் போயிட்டாடா"

"ஒன்னத் திருத்துறதப் பத்தி அவ என்ன இதுக்குக் கவலைப்படுறா? நீ சொன்னது அவளுக்குப் பிடிக்கலையின்னா சாரி-னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தானே? என்னாத்துக்கு ஓவரா டையலாக்-ல்லாம் வுடுறா"

"சரி வுடு மாமா, இத நாலு வருஷமா அனுபவிச்சுக்கிட்டு வர்றேன், எனக்கு ஒன்னும் புதுசு இல்லடா" என்றான். அவன் கண்ணில் இருந்த வலி எனக்குப் புரிந்தது. ஏனோ என் கண்ணில் இருந்த வலி தற்காலிகமாய் மறைந்து என் நன்பனுக்காக வருந்த ஆரம்பித்தது.

எனக்கு அவனிடம் பிடித்தது இந்த நேர்மையும் தைரியமும் தான். மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தினாலேயே மனதில் இருந்த காதலை மறைத்த பலரைப் பார்த்திருக்கிறேன். வேறு சில பேர் மூன்று ஆண்டுகள் காதலித்து விட்டு “நட்பு”டன் பிரிவதையும் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் ஒன்று நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் அல்லது காதலைக் கேவலப்படுத்துகிறார்கள். அது எப்புடித்தான் காதலி ரெண்டே நாளில் தோழியா மாறுகிறாளோ தெரியவில்லை.

அவள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவளை விரும்பியது விரும்பியது தான், காதல் ஒரு போதும் நட்பாகாது என்ற நிலையில் உறுதியாக இருந்த சந்துருவை என் மனம் வாழ்த்தியது. பல விஷயங்களில் நானும் அவனும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம்.

மணியைப் பார்த்தேன். 17:05. இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஓரளவு எல்லாருமே அவரவர் ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்திருந்தனர். எல்லா பசங்களும் சேர்ந்து வெளியே கிளம்பினோம். வெளியே பஸ் ஸ்டாப்பில் ஓரளவு கூட்டம் இருந்தது. பழைய நினைவுகள் வந்தது. இன்று கடைசி நாளாக இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம் என்ற உண்மை உறைத்தது. நடு ரோட்டில் அப்படியே கிட்டத்தட்ட 12 பேரும் வட்டமாக அமர்ந்தோம். கொஞ்சம் சூடாக இருந்தாலும் அந்தத் தார் ரோட்டில் கும்பலாக அமர்வது எங்களுக்குப் பிடித்திருந்தது.

சிறிது நேர அரட்டை.

அதிசயமாக ஒரு 10 நிமிடத்திற்கு சில இரு சக்கர வண்டிகளைத் தவிர எதுவும் வரவில்லை. அனைவரும் எழுந்து கொண்டோம். இன்று இரவு எல்லாரும் என்னுடைய அறைக்கு வருவதாக முடிவு செய்தோம். அங்கிருந்து அவரவர் ஊருக்குக் கிளம்ப வேண்டும். நான் 10 மணிக்குள் நெல்லை போய்விட்டுத் திரும்ப வேண்டும். ஏதொ ஒரு பேருந்து வந்து நின்றது.
சிலர் ஏறினார்கள் / இறங்கினார்கள்.
சந்துரு என்னிடம் திடீரென்று ஒரு Rs.50 நோட்டை எடுத்து நீட்டினான். இது செந்தூர் எக்ஸ்ப்ரெஸ்டா மாப்ள, இதில் போ என்றான். பேருந்து ஏறக்குறைய கிளம்பிக் கொண்டிருந்தது.

என்னடா அவசரம் என்றேன்.

"மொதல்ல கெளம்புடா, அப்புறம் பேசிக்கலாம், நேரம் இல்ல" என்றான்.
ஓடிச்சென்று ஏறினேன். ஏனோ கூட்டம் குறைவாக இருந்தது. நின்று கொண்டிருந்த போது, என்னுடன் க்ரிக்கெட் விளையாடும் என்னுடைய ஜூனியர் ஒருவன் ஒரு சீட்டிலிருந்து முளைத்தான்.

அண்ணா, இங்க வந்து உக்காருங்க என்றான்.

சீட் எங்கடா இருக்கு என்றேன்.

வாங்க, நீங்க உக்காருங்கண்ணா, நான் உங்க பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துக்கறேன் என்றான். போய் அமர்ந்தேன். ஏதோ ஒன்று உறுத்த சற்று முன்னோக்கிப் பார்த்தேன். எனக்குப் பரிச்சயமான கம்மல் தெரிந்தது. சற்று வலது பக்கம் நகர்ந்து பார்த்த போது எனக்கு இரண்டு சீட்டிற்கு முன்னால் அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் இதயம் அந்தப் பேருந்தை விட வேகமாய் இயங்க ஆரம்பித்தது. சந்துரு என்னை ஏன் அவ்வளவு அவசரமாக அனுப்பி வைத்தான் என்ற காரணமும் புரிந்தது
(5-ம் பகுதியில் முடியும்…..)