Wednesday, April 2, 2008

கறுவாப்பயலும் நேர்காணலும்...

கறுவாப்பயலும் நேர்காணலும்...

2004-ம் ஆண்டில் ஜூன் திங்களின் ஏதோ ஒரு நாள். கறுவாப்பயலாகிய நான் வேளச்சேரியில் ஒரு அறையில் தங்கியிருந்து கடுமையாக வேலை தேடிக் கொண்டிருந்த காலம். காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் விட்டுக் கொண்டு நம்ம பயபுள்ளைகளை எழுப்பி விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தேநீர்க் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது ஆனந்த் அமைதியான குரலில் கேட்டான். "டேய் ஒனக்கு இன்டர்வியூ எத்தனை மணிக்குடா?"
"ஒன்னே கால் மணிக்குத் தான்டா.."
"ஒன்னும் பெரிய விஷயம்லாம் இல்லடா, ஒரு பொய்ய சொல்லிட்டு அத கடைசி வரைக்கும் காப்பாத்தினாப் போதும்" என்று இன்டர்வியூ டிப்ஸ்களை அள்ளித் தெளித்தான்.

"சரி, எல்லா சர்ட்டிஃபிகேட்டும் இருக்காடா" என்றான்.

அவன் கேட்பதும் சரி தான். ஏனென்றால் கடந்த முறை சென்ற நேர்காணலின் போது நான் என்னுடைய கல்லூரி மதிப்பெண் பட்டியல் தொலைந்து விட்டதாகச் சொல்லித் தான் அட்டென்ட் செய்தேன்.

பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் காரணம் இல்ல. கல்லூரியில ஏழாவது செமஸ்டர் தேர்வின் போது ஒரு செய்முறைத் தேர்வு விழுந்து விட்டது (அல்லது கல்லூரி மொழியில் சொல்வதென்றால் LAB-ல ஆப்பு வச்சுட்டாங்க...)

எட்டாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் அப்போது வந்திருக்கவில்லை. லேப் தேர்வில் ஊத்தியதைக் காட்ட வேண்டாம் என்பதற்காக மதிப்பெண் பட்டியல் தொலைந்து விட்டதாகப் பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது.
ஆனால் கடந்த வாரம் வந்த தேர்வு முடிவில் எல்லாம் பாஸ் ஆகி 69.67% மதிப்பெண் பெற்றிருந்தேன். தூத்துக்குடியிலிருந்து நன்பன் ஜமீல் உசேன் என்னுடைய மதிப்பெண் பட்டியலைக் கொண்டு வந்திருந்தான். அவன் CLRI அருகில் தங்கியிருந்தான்.

நினைவு வந்தவனாக தேநீர் குடித்துவிட்டு ஜமீலின் அலைபேசி எண்ணை அழைத்தேன். சரியாக் 10 மணிக்கு வேளச்சேரி வந்து என்னிடம் மதிப்பெண் பட்டியலைத் தருமாறு சொன்னேன்.

அவனும் வருவதாக ஒப்புக்கொள்ளவே வீட்டுக்குச் சென்றோம். நான் நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நிறுவனம் துரைப்பாக்கத்தில் இருப்பதால் பிரச்சினை இல்லை. குறைந்த தொலைவு தான் போக வேண்டியிருக்கும்.

மணி பத்தரை ஆகியும் ஜமீல் வரவில்லை.

எனக்கோ டென்ஷன் எகிறிக்கொண்டிருந்தது. வெளியே போய் PCO-வில் சென்று அவனை அழைத்தேன்.

“டேய் சீக்கிரம் வாடா” என்று சொன்னேன்.

அவனோ படு கேஷுவலாக எனக்கு ஒடம்பு சரியில்லை நீ இங்கு வந்து வாங்கிட்டுப்போ என்றான்.

அடச் சண்டாளா! சதிகாரா!

என்று மனதிற்குள் பாராட்டிவிட்டு விரைவாக வீட்டிற்குச் சென்று குளித்து முடித்து ரெடியாகி வீட்டை விட்டு வெளியே வந்த போது மணி 11:15. இன்னும் ஒன்றேமுக்கால் மணி நேரத்தில் CLRI சென்று அவனிடம் மதிப்பெண் பட்டியல் வாங்கிவிட்டு, அதை நகல் எடுத்து விட்டு அடையாறு வழியாக ஒரு மணிக்குள் துரைப்பாக்கம் செல்ல வேண்டும்.

கிடைத்த பேருந்தைப் பிடித்து CLRI-யில் இறங்கி அந்த நாய் சொன்ன முகவரியைத் தேடிக் கண்டுபிடித்த போது மணி 12:05 ஆகியிருந்தது. CLRI பேருந்து நிலையத்திற்காவது வந்து Mark Sheet-க் குடுடா, எனக்கு நேரம் மிச்சமாகும் என்று சொன்னதைக்கூட பொருட்படுத்தாமல் என்னை அலைய வைத்த அவனது நட்பை நினைத்துப் புல்லரித்தது.

அவனிடம் Mark Sheet வாங்கி விட்டு நான் கற்று வைத்திருந்த அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் அவனை வாழ்த்திவிட்டு வெளியேறினேன்.

கிடைத்த ஆட்டோவைப்பிடித்து அடையாறு பேருந்து நிலையம் சென்றேன். அப்போதெல்லாம் எங்களுக்கு ஆட்டோவில் போவது ஆடம்பரம் (அது அவசியமாகவே இருந்தாலும்.. எக்கானமி ஒத்துழைக்கவில்லை....)

சரியாக 12:40க்கு துரைப்பாக்கத்தை அடைந்தேன். அப்போது தான் நினைவு வந்தது. அவசரத்தில் மதிப்பெண் பட்டியலை நகல் எடுக்க மறந்து விட்டேன்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்த நிறுவனத்திற்கு அருகில் எங்கேயும் கடையே இல்லை.

அது சரி, இப்போ எல்லா சாப்ட்வேர் நிறுவனமும் காட்டுக்குள் தானே கட்டுகிறார்கள்.

நல்ல வேளை பேருந்து வந்தது. வந்த வழியிலேயே பயணித்து கடைகளாகத் தென்பட்ட நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். மணி 12:50 ஆகியிருந்தது. நல்ல வேளை நகலெடுக்கும் கடையும் இருந்தது. நிம்மதியுடன் உள்ளே சென்றேன்.

ஆனால்…..

விதி விடாமல் துரத்தியது புரிந்தது.

அந்தக்கடையில் மின்சாரம் இல்லை. அந்த ஏரியாவிலும் தான்.... வழியில் வந்த ஒரு பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொண்டேன்.

அங்கிருந்து ஒரு 4 கி.மீ போயிருப்போம். ஒரு கடையில் மின்சாரம் இருந்தது. அவரிடம் நன்றி கூறி விட்டு இறங்கி கடையை நோக்கி ஓடினேன்.

நல்ல வேளை நகலெடுக்கும் கருவி ஒழுங்காக வேலை செய்தது. நகலெடுத்து பணம் கொடுத்து விட்டு எதிர் சாலையில் சென்று இன்னொரு பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறினேன். அந்த நிறுவனத்தின் முன்பாக இறங்கி உள்ளே சென்ற போது மணி 1:07 ஆகியிருந்தது.

அங்கு வெளியே நின்றிருந்த சிலர் மெதுவாக உள்ளே செல்ல ஆரம்பித்தனர். நல்ல வேளை எல்லாரும் உள்ளே போகும் முன் வந்து சேர்ந்தாயிற்று என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த நிறுவனத்திற்குள் சென்றேன்.

இப்போது தான் க்ளைமேக்ஸ் ஆன்ட்டி க்ளைமேக்ஸாகவும் அங்கிள் க்ளைமேக்ஸாகவும் மாறியது. இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடோடி வந்தா அந்தப்பாவிங்க என்ன இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டபோது மணி 5:10.

நாலு மணி நேரம் சும்மா இருந்தேன்.

அத விட மோசமான க்ளைமேக்ஸ் என்னான்னா அந்த நிறுவனத்திலேயே எனக்கு வேலையும் கிடைத்தது.
ஆனால் வேலைக்குச் சேர்ந்த 19 நாட்களிலேயே வேலையை விட்டு வெளியேறி வேறொரு இந்திய அரசு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தது தான் உச்சபட்ச முரண் நகை.

Thursday, March 13, 2008

A Long Day - 5

என் வாழ்வின் மிக நீளமான நாள் -5


பேருந்து சோனகன்விளையைத் தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. என் மனம் பல்வேறு உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பாதையில் நெல்லை செல்வது இதுவே கடைசி நாள்.

இன்னும் நாற்பத்தைந்து நிமிடத்தில் அவளை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகிறேன்; என்றுமே பார்க்க முடியாது என்ற எண்ணமும் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியிருந்தது.

பக்கவாட்டில் பார்க்கும் போது அவளுடைய கம்மல் தெரிந்தது. சற்றெ பெரிய புள்ளியைப் போல காதில் ஒட்டிக்கொண்டு இருந்தது. புதியது என்று நினைக்கிறேன்.

முன்பு வேறொன்று இருந்தது. சற்று நீளமாக "பென்டன்ட்" மாடலில் இருந்தது.

சரியாக ஒரு ஆண்டுக்கு முன் ஏதோ ஒரு நாளில் என் வகுப்பறையில் ஏதோ ஒரு மொக்கை லெக்சரின் போது, வகுப்பை மும்முரமாகக் கவனிக்கும் சாக்கில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

நானும் எப்பவும் போல் வகுப்பைக் கவனிப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கடமையே கண்ணாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்த அவளுடைய கையின் ஆள்காட்டி விரல் மட்டும் தொங்கிக் கொண்டிருந்த காதனியை தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு முறை தட்டும் போதும் அவளுடைய காதனி ஊசலாடிக் கொண்டிருந்தது, அவளுடைய காதனிக்குத் துனையாக என் உள்ளமும் கூட.......

எதேச்சையாக் பேருந்து நடத்துனரைத் தேடுவது போல அவள் திரும்பிப் பார்க்க, என் நினைவலைகள் பாதியிலேயே அறுந்து போனது.

இருவர் விழிகளும் மீண்டும் ஒரு முறை சந்தித்துக் கொண்டன. என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாள். இங்கேயும் வந்து விட்டான் என்று நினைப்பாளோ? தெரியவில்லை.

எனக்கு வருத்தமில்லை. ஏனெனில் இதற்கு முன்பு அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே பலமுறை நெல்லை சென்றிருக்கிறேன்.

ஏன் சென்றேன்?

ஏன் அவளிடம் அந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டேன்?

அவளுடைய முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டியது எது?

விடை தெரியவில்லை;

தெரிந்தால் அது காதலும் இல்லை.

சிறிது நேரத்தில் அவளுடைய நிறுத்தம் வந்தது. அவளுடைய முகத்தைப் பார்க்கக் கூடாது!

என்றைக்குமே...

அறிவு கட்டளையிட்டது.
ஆனால் உள்ளமோ, இறங்கிப் போகும் முன் ஒரே ஒரு முறை திரும்பிப் பார் என்று அவளிடம் கெஞ்சியது.

என் அறிவு என் உள்ளத்திடம் தோற்றது,

என் உள்ளம் அவளிடம் தோற்றது.

ஆம் அவள் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. அப்படியே இறங்கிச் சென்றாள். (ஏன்டா திரும்பிப் பாக்குற மாதிரியா ஒம்மூஞ்சி இருக்கு? “பாவம்டா அந்தப்புள்ள” என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது)

இருப்பினும் அவளை அறியாமல் அவள் எனக்கு விட்டுச் சென்ற சில நல்ல விஷயங்களும் இருந்தன.

நிராகரிக்கப் படுவதன் வலி எப்படி இருக்கும் என்று எனக்குக் உணர வைத்திருந்தாள் (கற்றுத்தந்திருந்தாள்).

இனி வாழ்வின் எந்த ஒரு தோல்வியும், எந்த இன்டர்வியூவில் நிராகரிக்கப்பட்டாலும் அது எனக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. வாழ்வின் தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் எனக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள். மேலும் என்னுடைய ஈ-மெயிலுக்கு Password-ம் தந்துவிட்டுப் போயிருக்கிறாள்.
நன்றி பெண்ணே!

சிறிது நேரத்தில் எங்கள் பேருந்து பாளை பேருந்து நிலையத்தைக் கடந்து மத்திய சிறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இடதுபுறம் திரும்பி சிறைச் சாலையைப் பார்த்தேன்.

நெஞ்சில் ஏதோ பெரிய பாரம் அழுத்துவது போல உணர்ந்தேன். ஒரு பெருமூச்சுடன் அதைக் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்தது.

சரியாக 40 நிமிடத்தில் எல்லா வேலையும் முடிந்தது, ரெஃபெரென்ஸ் கையொப்பம் வாங்கியாகி விட்டது. நேர்முகத்தேர்வுக்கான சில அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு நடந்து வந்து பேருந்து நிலையத்தை அடைந்த போது மணி 19:40.

திருச்செந்தூருக்கான அடுத்த பேருந்து இன்னும் 15 நிமிடத்தில் கிளம்பும். அருகிலிருந்த ஒரு STD பூத்தில் சென்று 91461 23......

ஜான் தான் எடுத்தான். டேய் தங்கச்சி அங்கே வந்தாளா? என்று கேட்டேன்...... STD பில்ரு. 6.50-ஐத் தாண்டுவதற்குள் பேச வேண்டியதைப் பேசி முடித்தேன். இல்லையென்றால் திருச்செந்தூர் செல்ல முடியாது.

பேசி முடித்து வெளியே வந்த போது இதுவரை உடலில் இருந்த துறுதுறுப்பு மறைந்திருந்தது. உடலும் உள்ளமும் துவண்ட நிலையில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் சந்தேகப்பட்டது சரி தான். என் தங்கை காலையில் சொன்னது போல அந்த Rs.1000 கொடுத்தது தந்தை இல்லை.

என் தங்கை தான் அவளுடைய காதனியை அடகு வைத்துக் கொடுத்திருக்கிறாள்.

ஒரு விநாடியில் என் காதலியின் கம்மல் என் கண்களிலிருந்து மறைந்து என் தங்கையின் முகம் நினைவுக்கு வந்தது. ஏன் இப்படிச் செய்கிறாள். பணம் வேண்டுமானால் என் நன்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் தானே.
இவள் ஏன்?

ஏற்கனவே தன்னுடைய செயினை அடகு வைத்துத் தான் இந்த ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணத்தை செலுத்த வைத்தாள். இப்போது கம்மலும் போய் விட்டது.

பாவம் இவளே இறால் பண்ணை, STD பூத் என்று பல இடங்களில் வேலை செய்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். வாங்கிய சம்பளத்தை அப்படியே எனக்குக் கொடுத்து விடுகிறாள்.

என் தங்கையே எனக்கு அம்மாவாக இருந்திருக்கலாம். இனிமேல் அவளைக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உள்ளத்தில் உறுதி பூண்டேன். பேருந்து மெதுவாக ஊர்ந்து பாளை மத்திய சிறையை நெருங்கிய போது உள்ளம் மேலும் கணத்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் எடுத்துக் கொண்ட உறுதி என் நினைவுக்கு வந்தது,

"ஒரு நல்ல அண்ணனாக நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாக நான் வெற்றி பெற்றே ஆக வேண்டும்; ஒரு நல்ல ப்ரொஃபெஷனலாகவும் ஒரு நல்ல அண்ணனாகவும் நான் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு காதலனாகத் தோற்பதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன்."

பேருந்து வேகமெடுத்தது. காலை 5:30 மணியிலிருந்து இப்போது வரையில் உடலில் ஓய்வு இல்லாமையாலும், கடைசி ஒரு மணி நேரம் உள்ளத்தில் ஏற்பட்ட அயற்சியும் பேருந்திலேயே என்னைத் தூங்க வைத்தது.

திருச்செந்தூர் வந்து சேர்ந்த போது மணி 21:35. என்னுடைய அறையை நோக்கி நடந்தேன். என்னுடைய அறையை நெருந்க்கிய போது நன்பர்கள் எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
பலர் மூட்டை முடிச்சுகளோடு.

திருச்செந்தூரில் எங்களுக்கு கடைசி இரவு. கோயில் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏற்றி விட்டோம்.
திருச்சி, நாமக்கல், சேலம், பந்தல்குடி என்று ஒவ்வொரு ஊருக்குப் போகிற நன்பர்களையும் ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தோம்.

"மறக்காம ஃபோன் பண்ணுடா",

“ ஈ-மெயில் அனுப்புடா",
"எப்பவும் போல என்னோட ஃபோன் நம்பரையும் தொலைச்சுறாதடா",
"அப்பா அம்மாவக் கேட்டதாச் சொல்லுடா",
"மாப்ள, அவ ஒங்க ஊரு தானே, அவ சென்னை கிளம்பினா, எனக்கு ஃபோன் பண்ணுடா",
"அடுத்த மாசம் பெங்களூர் போகும் போது என் கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டுப் போடா" என்பன போன்ற அக்கறையான குரல்கள் ஒலித்தன.

அவ்வப்போது கண்டக்டருக்குக் கேட்கும் குரலில் , "நன்பா, மத்த பஸ் மாதிரி இதுலேயும் டிக்கட் எடுக்காமப் போகனும்னு நெனைக்காதடா, இந்தக் கண்டக்டரு கொஞ்சம் வெவரமான ஆளு." என்றும் கண்டக்டரிடம் நேராகவே சென்று, " சார், பையன் டிக்கட் எப்பவும் எடுக்க மாட்டான், மறக்காம நீங்களே கேட்டு வாங்கிடுங்க" என்று எங்க பயலையும் கண்டக்டரையும் சேர்த்துக் கலாய்ப்பதுமாய் ஒரு வழியாய் வழி அனுப்பு வைபவம் முடிந்த போது மணி 00:35 ஆகியிருந்தது.

நான், சந்துரு, ப்ரேமானந்த், ராமலிங்கம் நால்வரும் சிறிது நேரம் கடற்கரையில் அமர்ந்து பேசி விட்டு அறைக்குத் திரும்பிய போது மணி 01:55 ஆகியிருந்தது. சிறிது நேரத்தில் எல்லாரும் உறங்க ஆரம்பித்தனர்.

ஜான் ஃபோனில் சொன்ன செய்தியை சந்துருவிடம் சொன்னேன், என்னுடைய உறுதிமொழியையும் அவனிடம் சொன்னேன்.
"ஏற்கனவே ஒரு காதலனாய்த் தோற்று விட்டேன்டா" என்றேன்.

"நிச்சயம் ஒரு அண்ணாகவும் ஒரு ப்ரொஃபஷனலாகவும் வெற்றி பெறுவாய்" என்றான் என் நன்பன். தூக்கம் மெதுவாகக் கண்களைத் தழுவியது.

முற்றும்...

பின்னுரை:2009-ல் ஏதோ ஒரு நாள்.

முத்துவேல் தன்னுடைய 2004-ம் ஆண்டு டைரியை ஒரு பெருமூச்சுடன் மூடி வைத்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துத் துடைத்து சூட்கேசுக்குள் வைத்தான்.

2004-ம் ஆண்டின் இறுதியில் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து போன அவனுடைய அருமைத்தங்கையின் புகைப்படம் தான் அது.

கையில் இருந்த ஃப்ளைட் டிக்கட்டை நோக்கினான். நாளை மாலைக்குள் உ.பி-யிலுள்ள நரோரா அனுமின் நிலையத்திற்குச் சென்று அந்த டர்பைன் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பது அவனுக்கு இடப்பட்ட கட்டளை. முத்துவேல் தன்னுடைய சூட்கேசை எடுத்துக் கொண்டு வலியைச் சுமந்த நெஞ்சோடு கிளம்பினான்.

Monday, March 3, 2008

A Long Day - Part 4

என் வாழ்வின் மிக நீளமான நாள் -4

கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டில் இருந்து இதயம் படபடக்க என்னுடைய டிப்பார்ட்மென்ட்டை நோக்கிப் போகும் போதே அவனிடம் கேட்டேன், "அவ கூப்பிட்டதா உனக்கு யாரு சொன்னாடா?"
அவனுடைய பதில் உடனே வந்தது, "நம்ம ப்ரொஃபசர் தான்டா"

உடனே எனக்குப் பாதி புரிந்து விட்டது. அவள் என்னிடம் பேச விரும்புவதே "Next to Impossible". அப்படியே அந்த .001% Probablityப்படி அது நடந்தாலும் அவள் நம்ம ப்ரொஃபசரிடம் சொல்லி என்னை அழைக்கச் சொல்வது நடக்கவே நடக்காது.

சரி. சொல்ல மறந்து விட்டேன். பொதுவா ஒவ்வொரு க்ளாஸ்லேயும் ஒரு பய அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு, வாத்தியாருங்க குடுக்குற மொக்க அஸைன்மென்ட்டையும் கூட கண்ணும் கருத்துமா செஞ்சு குடுத்து, நம்மள மாதிரி பசங்க கிட்ட வாத்தியார் இருக்கும் போது ஒட்டியும் ஒட்டாமப் பேசிக்கிட்டு, எதுக்கு எடுத்தாலும் அட்வைஸ் பண்ணிக்கிட்டு ஒருத்தன் இருப்பான் இல்லையா? அந்த மாதிரி என்னோட க்ளாஸ்லேயும் ஒரு நாறப்பய உண்டு. அவனத் தான் நாங்க ப்ரொஃபசர்-ன்னு பேரு வச்சுக் கூப்பிடுவோம்.

எங்கள் ப்ளாக் வாசலிலேயே அந்தப் பய என்னை எதிர்பார்த்துக்கிட்டு நிக்கிற மாதிரி ஒரு பில்ட்-அப் குடுத்துக்கிட்டு நின்று கொண்டிருந்தான். "டேய் இவன் சொல்லுறது உண்மையாடா? அவ என்ன வரச் சொன்னாளா?" மூச்சு விடாமக் கேள்வி கேட்டேன்.

அதுக்கு அந்த நாதாரி நாயி படு கேசுவலா சொன்னான், " இல்ல மாம்ஸ், நம்ம செல்வி தான்டா ஒன்னோட ஆட்டோக்ராஃப் புக்கத் திருப்பிக் குடுக்க ஒன்ன வரச் சொன்னா, நம்ம பசங்க கிட்ட ஒன்ன எங்கேன்னு கேட்டேன். ஒரு பய கண்டுக்கல, அதான் அத்தை கூப்புடுறான்னு ஒரு பொய்யச் சொன்னேன், பாத்தா ரெண்டு நிமிஷத்துல நீ இங்க வந்து நிக்குற, செல்வி நம்ம பவர் எலக்ட்ரானிக்ஸ் லேப்-ல இருக்காளாம், போ" என்று சொன்னான்.

"போடாங்...... " என்று தூத்துக்குடிக்கும் விளாத்திகுளத்திற்கும் இடையே உள்ளதும் எனைப் பெற்றெடுத்ததுமான அந்தப் பட்டிக்காட்டு கிராமம் எனக்குக் கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை அவனை நோக்கிக் கூறி விட்டு பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகம் நோக்கிப் போனேன்.

செல்வி இருந்தாள். அவளிடம் எனது ஆட்டோக்ராஃப் புக்கைப் பெற்றுக் கொண்டேன். செல்வி அவளின் நெருங்கிய தோழி. நான் அவளிடம் விடை பெற்று வெளியே வந்தேன். என்னுடைய வகுப்பறை நோக்கிச் சென்றேன். ஏதோ ஒன்று உறுத்த திரும்பிப் பார்த்தேன். லேபிலிருந்து செல்வியும் அவளும் போய்க்கொண்டிருந்தனர். இவள் எங்கே இருந்தாள்?

மெதுவாக நடந்து சென்று மேலே ECE டிப்பார்ட்மென்ட் செல்லும் படிக்கட்டில் அமர்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்தப் படிக்கட்டு தான் எனக்குப் பாதி நேரம் க்ளாஸ் பெஞ்ச்.

இரண்டாமாண்டில் எங்கள் டிப்பார்ட்மென்ட்டுக்கு வந்த போது கீழ் தளம் EEE-க்கும் மேல் தளம் CSE மற்றும் ECE வகுப்புமாய் இருந்தது. அந்தப் படிக்கட்டு எங்கள் ப்ளாக்கின் வாசலை எதிர்நோக்கி இருந்தது. யார் உள்ளே வந்தாலும் அந்தப் படிக்கட்டைக் கடந்து ஆக வேண்டும். மொத்தத்தில் மூன்று டிப்பார்ட்ம்ர்ன்டின் மூன்று ஆண்டு ஃபிகர்களையும் ஒரே இடத்தில் இருந்த படியே பார்ப்பதற்கு ஏற்றபடி வாஸ்த்து பார்த்துக் கட்டப்பட்ட படிக்கட்டு.

மூன்று ஆண்டுகளாக நானும் எனது நன்பர்களும் அங்கு அமர்ந்து ஜூனியர், சீனியர் பாகுபாடு இல்லாமல் சைட் அடிக்குறது, கமென்ட் அடிக்குறது, நம்ம பயலுவ எவனாவது ஒருத்தனோட ஆளு போனா அவன நல்லா அவ முன்னடியே கிண்டல் பண்ணி அழ வைக்குறது மாதிரி கடமைகளைக் கண்ணும் கருத்துமா செஞ்சுக்கிட்டிருந்த இடம் அது. அதை விட்டுப் பிரியப் போகுற வருத்தத்தில் அதன் மீது சாய்ந்து அமர்ந்தேன். சிறிது நேரத்தில் என்னொட நன்பர்களும் ஜூனியர் பசங்களும் வந்து ஒருவர் மடிய்ல் ஒருவர் சாய்ந்து அமர்வது மாதிரி சிறிது நேரம் இருந்தோம். வசந்த கால வாழ்வின் கடைசி நிமிடங்கள்.

அப்போது ப்ரிசில்லா அங்கு வந்தாள். வந்ததும் சந்துருவிடம் கேட்ட முதல் கேள்வி இது தான்:
“ப்ரேமானந்த் எங்கே? “
சந்துருவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. "நீ இன்று மதியம் முதல் இப்போ வரை இந்தக் கேள்வியை 8 முறை கேட்டு விட்டாய். அவனை நான் பாக்கவே இல்லை" என்று பதில் சொன்னான்.

அவள் போன பின்னர் படிக்கட்டு பாய்ஸ் எல்லோரும் அவனிடம் கேட்டோம், "என்னவான்டா, அவ ஏன் ப்ரேம்-மத் தேடுறாளாம்"?

சந்துரு, "கடைசி நாள் இல்லையா, அதான் தேடுறா"

"சரி இந்த நாயி எங்க போச்சு?"

"இல்ல மாப்ள, இவ கண்ணுல படக் கூடாது-ன்னு அந்தப் பய எஸ்கேப் ஆகி வேன் ஸ்டான்டுக்குப் போயிட்டான்"

"ஏன்டா, நம்ம பயலுக்கும் தான் அவளைப் புடிக்கும் தானே?" "ஆமாடா, ஆனா கடைசி நாள் இல்லையா, அவளப் பிரியப் போறது அவனுக்குக் கஷ்டமாயிருக்கலாம், அதனால அவன் ஒதுங்கியிருக்கலாம், அவ எழுதிக் குடுத்த ஆட்டோக்ராஃப் நோட்டப் படிச்சுட்டு நேத்து நைட்டு அந்த நாயி அவனும் தூங்காம, அவனோட ரூம் மேட்ஸையும் தூங்க விடாம இம்சை பண்ணியிருக்கான்"

"இது என்னடா கொடுமையா இருக்கு, நைட்டு முழுக்க அவளை நெனச்சு உருகுறது, பகல்ல நம்ம கிட்ட பேசும் போது, அவள கண்டுக்கவே மாட்டேன் மாப்ள-ன்னு நம்ம கிட்ட டையலாக் வேற உடுறான்"

"அதில்ல மாமா, அவன ரொம்பக் கேஷுவலான ஆளுன்னு எல்லாரும் நெனைக்குறோம் இல்லையா, அதையே கவரா வச்சு, அவனோட ஆளப்பத்திப் பேசும் போதெல்லாம் சமாளிச்சுக்கிட்டிருக்கான்டா இவன்"
"ஏன்டா அவன் அவளை விரும்பினா நாம என்னடா செய்யப்போறோம்?"

"நாம ஒன்னும் செய்ய மாட்டோம், அவ கிட்ட வரும் போது லைட்டா ஓட்டுவோம், அவனும் பல பேர ஓட்டியிருக்கான், அதனால தான் அவளக் கண்டுக்காத மாதிரி நம்ம கிட்ட நடிக்கிறான். மத்தபடி தனிமையில இருக்கும் போது அவள நெனச்சு உருகுறான்"

"சரி வுடு, இன்னிக்கு நைட்டு நம்ம ரூமுக்கு வருவான்ல அப்பப் பாத்துக்கலாம்" நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் படிக்கட்டில் ஒரு அசாத்திய மௌனம் நிலவியது.

மற்ற பசங்களெல்லம் கப், சிப் பென்று அமைதியாக, இடது புறம் திரும்பிப் பார்த்தேன். அங்கே மேகா நின்றிருந்தாள். ஒரு 10 வினாடிகள் அமைதி நீடித்தது. பின்னர் அவளே அந்த சூழ்நிலையின் அமைதியை உடைத்தாள். சந்துருவை நோக்கி,"உன்னிடம் பேச வேண்டும்" என்றாள்.

சந்துரு அமைதியாக எழுந்து சென்றான். இருவரும் அருகில் இருந்த வகுப்பறையை நோக்கிச் சென்றனர். சந்துரு முதலாம் ஆண்டு சேர்ந்து சில நாட்களிலேயே அவளிடம் தனது காதலைத் தெரியப்படுத்தியிருந்தான். ஆனால் அவளும் எல்லா ஃபிகர்களையும் மாதிரி கேஷுவலாக நிராகரித்து விட்டாள். அடுத்த மூன்று ஆண்டுகள் இருவரும் ஒரே வகுப்பில் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை.
வகுப்பறை கிட்டத்தட்ட ஒரு நரகம் போலத் தான் அவனுக்கு இருந்தது. இருந்தாலும் நன்பர்களுடன் சேர்ந்தே இருந்ததால் அவனுக்கு அந்த வலி தெரியவில்லை.

ஆனால் அவன் இதுநாள் வரை மற்ற எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. சிறிது நேரத்தில் சந்துரு திரும்பி வந்து படிக்கட்டில் என் மடியில் அமர்ந்தான். அவள் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த போது தலையில் அடித்துக் கொண்டு வந்ததையும் நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். "ஒன்னும் இல்ல மாப்ள, எப்பவும் போல நன் ஒன்னோட மனசப் புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சுடு, நாம நன்பர்களாவே பிரிவோம்-னாடா"

"அதுக்கு நீ என்ன சொன்னடா?"

"நான் என்ன சொல்ல, உன்ன எனக்கு இன்னும் பிடிச்சிருக்கு-ன்னு உண்மையச் சொன்னேன், பதிலுக்கு அவ ஒன்னத் திருத்தவே முடியாது-ன்னு சொல்லிட்டுப் போயிட்டாடா"

"ஒன்னத் திருத்துறதப் பத்தி அவ என்ன இதுக்குக் கவலைப்படுறா? நீ சொன்னது அவளுக்குப் பிடிக்கலையின்னா சாரி-னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியது தானே? என்னாத்துக்கு ஓவரா டையலாக்-ல்லாம் வுடுறா"

"சரி வுடு மாமா, இத நாலு வருஷமா அனுபவிச்சுக்கிட்டு வர்றேன், எனக்கு ஒன்னும் புதுசு இல்லடா" என்றான். அவன் கண்ணில் இருந்த வலி எனக்குப் புரிந்தது. ஏனோ என் கண்ணில் இருந்த வலி தற்காலிகமாய் மறைந்து என் நன்பனுக்காக வருந்த ஆரம்பித்தது.

எனக்கு அவனிடம் பிடித்தது இந்த நேர்மையும் தைரியமும் தான். மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பயத்தினாலேயே மனதில் இருந்த காதலை மறைத்த பலரைப் பார்த்திருக்கிறேன். வேறு சில பேர் மூன்று ஆண்டுகள் காதலித்து விட்டு “நட்பு”டன் பிரிவதையும் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் ஒன்று நட்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் அல்லது காதலைக் கேவலப்படுத்துகிறார்கள். அது எப்புடித்தான் காதலி ரெண்டே நாளில் தோழியா மாறுகிறாளோ தெரியவில்லை.

அவள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவளை விரும்பியது விரும்பியது தான், காதல் ஒரு போதும் நட்பாகாது என்ற நிலையில் உறுதியாக இருந்த சந்துருவை என் மனம் வாழ்த்தியது. பல விஷயங்களில் நானும் அவனும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம்.

மணியைப் பார்த்தேன். 17:05. இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஓரளவு எல்லாருமே அவரவர் ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்திருந்தனர். எல்லா பசங்களும் சேர்ந்து வெளியே கிளம்பினோம். வெளியே பஸ் ஸ்டாப்பில் ஓரளவு கூட்டம் இருந்தது. பழைய நினைவுகள் வந்தது. இன்று கடைசி நாளாக இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம் என்ற உண்மை உறைத்தது. நடு ரோட்டில் அப்படியே கிட்டத்தட்ட 12 பேரும் வட்டமாக அமர்ந்தோம். கொஞ்சம் சூடாக இருந்தாலும் அந்தத் தார் ரோட்டில் கும்பலாக அமர்வது எங்களுக்குப் பிடித்திருந்தது.

சிறிது நேர அரட்டை.

அதிசயமாக ஒரு 10 நிமிடத்திற்கு சில இரு சக்கர வண்டிகளைத் தவிர எதுவும் வரவில்லை. அனைவரும் எழுந்து கொண்டோம். இன்று இரவு எல்லாரும் என்னுடைய அறைக்கு வருவதாக முடிவு செய்தோம். அங்கிருந்து அவரவர் ஊருக்குக் கிளம்ப வேண்டும். நான் 10 மணிக்குள் நெல்லை போய்விட்டுத் திரும்ப வேண்டும். ஏதொ ஒரு பேருந்து வந்து நின்றது.
சிலர் ஏறினார்கள் / இறங்கினார்கள்.
சந்துரு என்னிடம் திடீரென்று ஒரு Rs.50 நோட்டை எடுத்து நீட்டினான். இது செந்தூர் எக்ஸ்ப்ரெஸ்டா மாப்ள, இதில் போ என்றான். பேருந்து ஏறக்குறைய கிளம்பிக் கொண்டிருந்தது.

என்னடா அவசரம் என்றேன்.

"மொதல்ல கெளம்புடா, அப்புறம் பேசிக்கலாம், நேரம் இல்ல" என்றான்.
ஓடிச்சென்று ஏறினேன். ஏனோ கூட்டம் குறைவாக இருந்தது. நின்று கொண்டிருந்த போது, என்னுடன் க்ரிக்கெட் விளையாடும் என்னுடைய ஜூனியர் ஒருவன் ஒரு சீட்டிலிருந்து முளைத்தான்.

அண்ணா, இங்க வந்து உக்காருங்க என்றான்.

சீட் எங்கடா இருக்கு என்றேன்.

வாங்க, நீங்க உக்காருங்கண்ணா, நான் உங்க பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துக்கறேன் என்றான். போய் அமர்ந்தேன். ஏதோ ஒன்று உறுத்த சற்று முன்னோக்கிப் பார்த்தேன். எனக்குப் பரிச்சயமான கம்மல் தெரிந்தது. சற்று வலது பக்கம் நகர்ந்து பார்த்த போது எனக்கு இரண்டு சீட்டிற்கு முன்னால் அவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. மீண்டும் இதயம் அந்தப் பேருந்தை விட வேகமாய் இயங்க ஆரம்பித்தது. சந்துரு என்னை ஏன் அவ்வளவு அவசரமாக அனுப்பி வைத்தான் என்ற காரணமும் புரிந்தது
(5-ம் பகுதியில் முடியும்…..)

Friday, February 22, 2008

A Long Day - 3

என் வாழ்வின் மிக நீளமான நாள் -3
தேர்வு அறைக்குள் நுழைந்தேன். இதற்கு முன்பு அட்மின்-ப்ளாக்கில் தான் தேர்வு எழுதுவோம். இப்போது புதிதாகக் கட்டப்பட்ட சிவில் டிப்பார்ட்மென்ட்டில் வைத்துத் தான் எழுத வேண்டும். தேர்வு அறையின் நான்காவது வரிசையின் இரண்டாவது இருக்கையில் அவள் இருந்தாள். இருவர் கண்களும் 2 வினாடிகள் சந்தித்துக் கொண்டன. பின்னர் பார்வையை விலக்கிவிட்டு இருக்கையை நோக்கிப் போனேன். தேர்வு எழுதும் டெஸ்க் சற்று சாய்வாக இருக்கும், அதை ட்ராயிங்க் போர்டாகவும் தேர்வு மேசையாகவும் பயன்படுத்துவோம். முன்னொரு முறை அதை நான் வேறு விதமாகவும் பயன்படுத்தியிருக்கிறேன்…

2002-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நடந்த ஒரு இம்சைத் தேர்வின் போது (பீரியாடிக் டெஸ்ட்டை நாங்கள் இப்படித் தான் சொல்வோம்) தான் அது நடந்தது. முந்தின வாரத்தில் தான் என் இதயத்தை சுக்கு நூறாக உடைத்திருந்தாள்; ஒரு வாரம் முழுதும் அதன் பின்னர் பேசவேயில்லை. (உலகின் மிகக் கொடுமையான விஷயம் மௌனம் தான்...) அந்தத் தேர்வு அறைக்கு சற்று முன்னரே வந்து விட்டேன்; யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அவளுடைய எண் கொண்ட மேசையைத் தேடினேன். அவளுடைய எண் மனப்பாடமாய் இருந்தது. எனக்கு ஏனோ அன்று மட்டும் எல்லாமே நல்லதாகவே நடந்தது.

முதலில் அறையில் எந்தப் பயலும் இல்லை. (வழக்கமா எவனாவது ஒரு பழம் தேர்வு அறையில் உக்காந்து தேர்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முந்தி கண்ணுல கொலை வெறியோட படிச்சுக்கிட்டிருப்பான்; டேய் இது வெறும் பீரியாடிக் டெஸ்ட் தான்டா! இதுக்குமா இவ்ளோ ரத்த வெறி..)

இரண்டாவது அவளுடைய எண் கொண்ட மேசை எந்தக் கீறலும் கிறுக்கலும் இல்லாமல் இருந்தது. பொதுவாக எந்தக் கல்லூரிக்கு நீங்கள் சென்றாலும் அங்கு உள்ள டெஸ்க்கில் கிறுக்கல் இல்லாமல் பார்க்க முடியாது. சினிமாப் பாடல்கள், காதல் கவிதைகள், பேனாவை வைத்து வரையப்பட்ட (கிறுக்கப்பட்ட) பெண்களின் படங்கள், அல்லது ஃபீல்ட் தியரியில் உள்ள சில சமன்பாடுகள் என்று ஏதாவது இருக்கும். நல்ல வேளை அதில் எதுவுமே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே என்னுடைய பென்சிலை எடுத்து (ரவியிடமிருந்து பிடுங்கப்பட்ட பென்சில் தான்.) டெஸ்க்கில் எழுத ஆரம்பித்தேன். ஒரே வரி தான். சொல்ல வந்தவற்றை சுருக்கமாகச் சொல்லியாகி விட்டது.

மீண்டும் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து விட்டு என்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டேன். கேள்வித்தாள் கொடுக்க ஆரம்பித்தனர்.

நான் என்னுடைய தேர்வைத் தான் எப்போதோ எழுதிவிட்டேனே.

இரண்டரை மணி நேரத்தில் தேர்வு முடிந்து விட்டது. எல்லோரும் வெளியே போய்விட்டனர். நானும் வெளியேறினேன். அட்மின் ப்ளாக்கை விட்டு நன்பர்களுடன் வெளியே வந்த பின்னர் "டேய் பென்சில மறந்து வச்சிட்டு வந்துட்டேன், போய் எடுத்து வர்றேன்” என்று சொல்லிவிட்டு தேர்வு அறையை நோக்கிப் போனேன்.

உள்ளே என் கால்கள் என்னைக் கேளாமல் அவளுடைய இருக்கை நோக்கிச் சென்றது. அவளுடைய டெஸ்க்கைப் பார்த்தேன். உள்ளத்தில் ஏனோ மகிழ்ச்சி பொங்கியது.

போன வாரம் என் மனதை உடைத்த அவள் இம்முறை அவளுடைய மௌனத்தை உடைத்திருந்தாள். நான் கேட்ட கேள்விக்கு ஒரு பாசிட்டிவான பதிலைப் பென்சிலால் எழுதியிருந்தாள்.

எனக்கு வேறு ஒரு விஷயம் ஆச்சரியமாய் இருந்தது. நான் யாரும் இல்லாத நேரமாய்ப் பார்த்து தான் எழுதியிருந்தேன். இவள் எப்படி தேர்வு ஆறைக்குள் ஆசிரியர் கண்கொத்திப் பாம்பாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பென்சிலை வைத்து டெஸ்க்கில் எழுதினாள்?

பொதுவாக எல்லா வகுப்பிலும் ஒரு பத்து மாணவர்களாவது "பழம்" என்று அன்போடு அழைக்கப்படுவார்கள். எங்கள் வகுப்பில் இருந்த 12 பழங்களில் இவள் 12-வது பழம். இவளா ஆசிரியர் இருக்கும் போதே டெஸ்க்கில் எழுதினாள் என்று நினைக்கும் போது அவளுடைய தைரியத்தை நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

அட ஙொக்காமக்கா!!! இந்தப் பழத்துக்கு இம்புட்டு தைரியமா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே " பொத்" என்று ஏதோ விழுந்தது.

என்னுடைய டெஸ்க்கில் விடைத்தாளைத் தான் அந்த சூப்பர்வைசர் அப்படிப் போட்டிருந்தார்.
மீண்டும் 2004-க்கு திரும்பி வந்தேன்.

கேள்வித்தாளும் என்னுடைய டெஸ்க்கில் கிடந்தது. சே! தேர்வு அறையில் வந்து அமர்ந்த பின்னும் அவளை நினைத்துக் கொண்டிருக்கிறேனே?
தேர்வு எழுத வேண்டிய பாடம் மறந்து விட்டால் என்ன செய்வது? என்றெல்லாம் எண்ணம் வந்தது.
சரி. படித்தால் தானே மறந்து போவதற்கு?

கேள்வியைப் பார்க்காமலேயே பதில் எழுதத் தொடங்கினேன். (நான்கு ஆண்டுகளாக இதைத்தானே செய்து கொண்டிருக்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது...) தேர்வு முடிய அரை மணி நேரம் இருக்கிறது. மெதுவாக அவளைத் திரும்பிப் பார்த்தேன். மீண்டும் இருவரது கண்களும் சந்திதன. சரி வெளியே கிளம்ப வேண்டியது தான் என்று முடிவு செய்து கொண்டு பேப்பரைக் கொடுத்து விட்டு முதல் ஆளாக வெளியேறினேன்.

நான் இதில் மட்டும் தான் முதல் மாணவன்.

தேர்வு அறைக்கு வெளியே வந்ததும் பி.டி சாரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மிக நல்ல மனிதர். மற்ற பி.டி ஆசிரியர்களைப் போல் அல்லாமல் எல்லா விதத்திலும் எல்லா மாணவரகளுக்கும் உதவி செய்வார். நான் மூன்றாமாண்டு இறுதியில் ஆர்மிக்கான இன்ட்டர்வியூ-வுக்குத் தயார் செய்த போது 100மீ ஓடுதல், கயிறு ஏறுதல், வெயிட்டைத் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்று எல்லாவற்றுக்கும் பயிற்சி கொடுத்தார். அது விடுமுறை நாட்கள் என்பதால் க்ரௌண்டில் நானும் அவரும் மட்டும் தான் இருப்போம். அது மட்டுமில்லாமல் நான்காமாண்டு ஃபீஸ் கட்ட வழியில்லாத போது சிறிது கடனும் கொடுத்தார்.

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு விடை பெறுவதற்காக அவரைத் தேடிச் சென்றேன். ஆனால் அவர் இல்லை. எல்லா அறையிலும் தேடினேன். இல்லை. மெக் டிப்பார்ட்மென்ட்டிலிருந்து வெளியேறினேன்.

மீண்டும் சிவில் பில்டிங்கைக் கடந்த போது...

அவள் வெளியே வந்து கொண்டிருந்தாள். ஒரு வினாடி அதிர்ந்து தான் போனேன். ஏனென்றால் மொக்கைத் தேர்வாக இருந்தாலும் தேர்வு முடிந்தது என்று மணி அடித்து, அங்குள்ள வாத்தியாருங்க வந்து ஆன்சர் பேப்பரப் புடுங்கி அனுப்பினால் தான் இவள் தேர்வு அறையை விட்டு வெளியே வருவாள். இன்னிக்கு என்னடான்னா தேர்வு முடிய 20 நிமிடம் இருக்கும் போதே வெளியே வந்துவிட்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஒரு ஏழு வினாடிகள் இருவரது கண்களும் சந்தித்துக் கொண்டன. ஏழு வினாடிகள் என்பது எவ்வளவு நீளமானது என்பது அன்று எனக்குப் புரிந்தது. பின்னர் அவள் தலையை குனிந்து கொண்டாள். குனிந்த தலையுடன் அவள் புன்னகைப்பது போலத் தோன்றியது. திருப்பிப் புன்னகைக்கலாம் என்று தோன்றிய எண்ணம் என் மேல் உதட்டுக்கு சற்று மேலே எங்கேயோ தொலைந்து போனது.

அவளுடைய முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டேன். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வேன் ஸ்டான்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கு தான் நன்பர்களுடன் லஞ்ச்.
இன்று இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஆட்டோக்ராஃப், புகைப்ப்டம் எடுத்தல் என்று பொழுது போய் விடும். சரியாக 5 மணிக்கு திருநெல்வேலிக்குப் போக வேண்டும்.

லஞ்ச் முடிந்து திரும்பி வந்த போது எங்கள் டிப்பார்ட்மென்ட் சற்று கலகல்ப்பாக இருந்தது. நன்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மீதமிருந்த ஆட்டோகிராஃப்களையும் முடித்துக் கொடுத்தேன்.

கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட்டுக்குப் போய் சீமா மேடத்திடம் நன்றி சொல்லிவிட்டு விடை பெற்று வரக் கிளம்பினேன். அவர் எனக்கு கூடப் பிறக்காத அக்கா. எனக்கு எவ்வளவு உதவிகள் செய்திருப்பார்கள் என்று கணக்கிட முடியாது. அவர் செய்த உதவிகளுக்கெல்லாம் என் வாழ்நாள் முழுவதிலும் அவருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்.

அவரைச் சந்தித்தேன். விடை பெற்றுக் கிளம்பும் போது ஒரு ஃபைலைக் கொடுத்தார். இன்ட்டர்வியூவுக்குப் போகிறாய் அல்லவா? இதை வைத்துக் கொள் என்று சொல்லிக் கொண்டே விடை கொடுத்தார். கண்ணில் நன்றியோடு வெளியே வந்தேன்.

என்னைத் தேடி அங்கேயே வந்திருந்த ஜெஃபர்சன், "டேய் மாம்ஸ் ஒன்ன அத்தை தேடுறாடா, உடனே நம்ம டிப்பார்ட்மென்ட் போ" என்றான்.

பொய் சொல்கிறானோ என்று தோன்றினாலும் அது உண்மையாக இருக்கக் கூடாதா என்ற முட்டாள்த்தனமான எண்ணமும் வந்தது. இதயம் வேகமாக அடித்துக் கொள்ள என்னுடைய டிப்பார்ட்மென்ட் நோக்கிப் போனேன்.....

(நான்காம் பாகத்தில் தொடரும்...)

Saturday, February 2, 2008

A Long Day..... (Part – 2)

ஒவ்வொருவராகச் சென்று குளித்து முடித்துவிட்டு உடை அணிந்து ரெடியானோம். மணி 08:15.

சந்துரு மீண்டும் ஒரு முறை முதல் 3 யூனிட்டில் வரும் கேள்விகளை சொல்லிக் கொடுத்தான். எல்லோரும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தோம்.

(அதென்னவோ தெரியவில்லை, வகுப்பறையில் இருக்கும் போது பாடம் கவனிக்கத் தோனுவதேயில்லை. கண்ணும் கவனமும் வேறு பக்கம் தான் இருக்கிறது. ஆனால் நம்ம பய எவனாவது சொல்லிக் கொடுத்தா நல்லா புரியுது)

3 யூனிட்டும் முடிந்த போது மணி 08:40 ஆகியிருந்தது. நம்முடைய சுந்தரனார் பல்கலைகழகத்தில் அது ஒரு நல்ல விஷயம். எதாவது 3 யூனிட் மட்டும் நன்றாகப் படித்தால் போதும், மற்ற 2 யூனிட்டையும் சும்ம பாத்துட்டுப் போனாலே போதும் எளிதில் நல்ல மதிப்பெண் பெறலாம். அதனால் தான் சந்துரு சொல்லிக் கொடுக்கும் போது அத்தனை கவனம்!!.

அது போல சந்துருவும் பொறுமையாக எல்லாம் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் படித்து அரியர்ஸ் தூக்கினவங்க நெறைய பேரு.

08:50க்கு செந்தூர் எக்ஸ்ப்ரெஸ் வந்து விடும். ஓட்டமும் நடையுமாய் அந்த அக்ரஹாரத் தெருவுக்கு அருகில் இருந்த ஸ்டாப்பில் நின்று கொண்டு தெருப் பக்கமாய் கண்களை தவழ விட்டோம்.

(சே! இன்னிக்குப் பாத்து எவளையும் காணோம்...)

செந்தூர் எக்ஸ்ப்ரெஸ் வந்தது. உள்ளே அமர்ந்தோம்.
கல்லூரி ஸ்டாப்பில் போய் இறங்கிய போது மணி 09:00
எங்களுக்கு 10:00 மணிக்குத் தான் தேர்வு.

"சரிடா நான் HoD-யப் பாத்துட்டு வர்றேன்டா, அவருகிட்ட இந்த இன்டர்வியூ ஆர்டரக் காமிச்சுட்டு, இதுல ரெஃபெரென்ஸ் கையெழுத்து வாங்கிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு துறைத்தலைவர் அறையை நோக்கிப் போனேன்.


என்னுடைய ராசிப்படி அவர் அறையில் இருக்க மாட்டார் என்று நினைத்துக்கொண்டே போனேன். ராசி சரியாக வேலை செய்தது. அவர் இல்லை. டிப்பார்ட்மென்டில் விசாரித்த போது ராசி சற்று பலமாகவே வேலை செய்தது புரிந்தது. இன்னும் ரெண்டு நாளைக்கு அவர் வரமாட்டார். சரி, அவர் வீட்டுக்கே போக வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன்.


அவருடைய அறையை விட்டு வெளியே வந்தேன். இதயம் படபடத்தது. அவள் தான் வந்து கொண்டிருந்தாள். என்னைக் கடந்து போனாள். கடந்த போது என்னைப் பார்த்தாளா அல்லது எனக்குத் தான் அப்படித் தோன்றியதா தெரியவில்லை.


சரி, அவளை நிறுத்தி நான் அந்தப் பொதுத் துறை நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றதையும் இன்டர்வியூ-வுக்கு அழைக்கப்பட்டிருப்பதையும் சொல்லலாம் என்று நினைத்தேன். ஏதோ ஒன்று தடுத்தது.


என்னுடைய வெற்றி நல்ல செய்தி தான் என்றாலும், நான் போய்ச் சொன்னால் அவளிடம் என்ன மாதிரியான ரியாக்ஷன் இருக்கும் என்று தெரியவில்லை. வேண்டாம், பேசியே கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவடுத்தேன். அதற்குள் அவள் வெகு தூரம் போயிருந்தாள்.


என்னை விட்டும் தான்....



தூரத்தில் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த
என்னுடைய தோளைப் பற்றி யாரோ திருப்பியது போல் இருந்தது.

யாரென்று பார்க்கத் திரும்பினேன். காளி நின்றிருந்தான். "ஏன்டா அவளையே எரிக்கிற மாதிரி பாத்துக்கிட்டு இருக்க, நீ சாதாரணமா பாத்தாலே பயமாத்தான் இருக்கும், நீ ரொமான்டிக்கா பாக்கிறதா நெனச்சிட்டுப் பாத்தா இன்னும் கொடூரமா இருக்கும். இப்ப நீ பாக்கிற பார்வை இருக்கே அது கொலகாரப் பார்வை. நல்ல வேளை, அவ ஒன்னப் பாக்கல" என்றான்.

"ஏன்டா இப்படி?? மூச்சு வுடாம ஓட்டுற, நான் என்னடா பண்ணுவேன்? என்னோட மூஞ்சி அப்படி, கண்ணும் எப்பவும் செவந்து தான் இருக்கு. சரி வா எக்ஸாம் ஹாலுக்குப் போகலாம், இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு" என்று சொல்லிவிட்டு சிவில் டிப்பார்ட்மென்ட் நோக்கி நடந்தோம்.

அன்று எங்களுக்கும், ECE டிப்பார்ட்மென்ட்டுக்கும் மட்டும் தான் தேர்வு. நாளை மறு நாள் தான் Mech-ம் CSE-யும் தேர்வு எழுதுகிறார்கள்.


இருந்தாலும் எல்லாருமே கல்லூரிக்கு வந்திருந்தனர். தேவ், செல்வன் இருவரும் எதிரில் வந்து கொண்டிருந்தனர். என்னையும் காளியையும் பார்த்து விட்டு சிரித்தனர். எங்கள் நால்வருக்குள்ளும் எப்பவுமே ஒரு ஆரோக்கியமான போட்டி உண்டு.

யார் அதிகக் கருப்பு என்பதில் தான் அந்தப் போட்டி???!!!. பெரும்பாலும் போட்டி ட்ராவில் தான் முடியும். எங்களைக் கடந்து சென்ற கந்தசாமி "என்னடா கருப்பர்கள் மாநாடா?" என்று சொன்ன கமென்ட் எங்கள் காதில் விழுந்தது.


ஏனோ நாங்கள் சேர்ந்து (செல்வன் தவிர்த்து) ஃபர்ஸ்ட் இயர் ஹாஸ்டலில் அட்டென்ட் செய்த 13 என்கொயரியும் நினைவுக்கு வந்தது.


"இன்று எங்களுடன் VAN-ல திருநெல்வேலி வரை வர்றியா? இன்னிக்கு நீ கண்டிப்பா திருநெல்வேலி போவன்னு எனக்குத் தெரியும் "தேவா கேட்டான்.


"நான் பாளைய்ங்கோட்டைக்கு போகனும்டா, ஆனா நீ நெனைக்குற காரணம் இல்ல" என்றேன்.

அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

நடக்கும் போது பழைய வேன் வாழ்க்கை நினைவு வந்தது.

மாலையில் திருச்செந்தூரிலிருந்து திருவைகுண்டம் வரை வேனில் போய்விட்டு பின் அங்கிருந்து வேனில் யாரிடமாவது பைசா கடன் வாங்கி திருச்செந்தூருக்குத் திரும்பி விடுதிக்கு வந்த பழைய ஞாபகம் வந்தது.

அவள் முகத்தை அரை மணி நேரம் பார்ப்பதற்கு ஒரு மணி நேரப் பயணம்!!!.


எல்லாமே முடிந்து விட்டது....

ஒரு உலர்ந்த புன்னகையுடன் தேர்வு அறையை நோக்கிச் சென்றேன்.
மணி 09:55

பாகம் மூன்றில் தொடரும்.....
என் வாழ்வின் மிக நீளமான நாள்.... (பாகம் - 2

Wednesday, January 23, 2008

A Long Day Part - 1)

அன்று ஏப்ரல் 29, 2004 அதிகாலை 05:30 மணி……அந்த அதிகாலை நேரத்திலும் திருச்செந்தூர் சற்றே சுறுசுறுப்புடன் தான் இருந்தது. புளியடித் தெருவின் நடுவில் உள்ள அந்த வீட்டின் மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முத்துவேல் ஆகிய நான் நிதானமாக என்னுடைய T-ஷர்ட்டை அணிந்து கொண்டிருந்தேன். பின்னாலே திரும்பிப் பார்த்தேன். சந்துரு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். கூடவே ரொனால்ட், ராமலிஙக்ம், ஜெஃப்பர்ஸன் அனைவருமே தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தனர். பாவம் இன்று இறுதித் தேர்வு. அனேகமாக நள்ளிரவு தாண்டி மூன்று மணிக்குத் தான் படுத்திருப்பார்கள். சந்துரு தவிர மற்ற் அனைவருக்குமே இன்று உச்சிக்குப் பிறகு அரியர் தேர்வும் இருந்தது. அதற்கும் சேர்த்து சந்துரு சொல்லிக் கொடுத்திருப்பான்.

அவனை எழுப்ப வேண்டாம். ஆனால் தேர்வு நேரம் தவிர இவனை விட்டு நான் தனியே ஜாகிங் சென்றது கிடையாது. அவன் முகத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். இவன் மட்டும் இல்லையென்றால் நான் இந்த அறையில் தங்கியிருப்பதோ அல்லது நான்காம் ஆண்டு படிப்பைத் தொடர்ந்திருப்பதோ, என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால்... இன்று எங்கள் கல்லூரி வாழ்வின் இறுதி நாள்.
ஒரு பெருமூச்சுடன் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தேன். ஓரளவு வெளிச்சம் இருந்தது. ஏப்ரல் அல்லவா, சீக்கிரமே விடிய ஆரம்பித்திருந்தது. புளியடித் தெருவைக் கடந்து சன்னதித் தெருவுக்குள் நுழைந்தேன். எதிரில் மீனா அக்கா வந்து கொண்டிருந்தார். அதே புன்னகை மாறாத முகம். சன்னதித்தெருவில் நிறைய மடங்கள் உண்டு. அவற்றில் இரண்டு மடங்களில் அதிகாலையிலேயே சென்று கழுவி தூய்மையாக்குவது அவருடைய அன்றாடப் பணி.
அவருக்கே உரிய அன்பான குரலில் கேட்டார் "இன்னைக்கு எத்தனை பேருக்கு சாப்பாடு வேணும் தம்பி?"
"5 பேருக்குக்கா" என்றேன்.

பின்னர் தயங்கியபடி "அக்கா நான் நாளைக்கு காலைலயே கிளம்பிடுவேன், சந்துரு நாளை மறு நாள் கிளம்புவான், கணக்குப் பார்த்து மொத்தம் எவ்வளவுன்னு அவங்கிட்ட சொல்லிடுங்க" என்றேன்.

நாங்கள் இந்த அறையில் தங்கிய இந்த ஒரு ஆண்டு முழுவதும் மீனா அக்கா தான் காலைச் சாப்பாடு கொண்டு வருவார். மாத இறுதியில் பணம் கொடுக்க வேண்டும். நாங்கள் இதுவரை ஒரு மாதம் கூட சரியான நேரத்தில் கொடுத்தது கிடையாது. இருந்தாலும் அவர் ஒரு முறை கூட முகம் சுளித்துப் பேசியது கிடையாது. அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன்.

சன்னதித் தெருவில் சில தூரம் சென்று பின்பு வடக்குப் பக்கம் விலகி காவலர் குடியிருப்பை நோக்கிச் சென்றேன். அங்கு இரண்டாவது தெருவின் முதல் வீடு நன்பன் ஈஸ்வரனின் வீடு. வீட்டில் விளக்கு எரியவில்லை. முற்றம் தெளிக்கப்பட்டிருந்தது. அம்மா பால் வாங்கச் சென்றிருக்கலாம். வீட்டின் வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு, வீட்டின் தாழ்வாரத்தில் இருந்த என்னுடைய ஷூ-வை எடுத்து அணிந்து கொண்டேன். நேராகக் கடற்கரையை நோக்கி நடந்தேன். கடற்கரையில் மிதமான வேகத்தில் ஜாகிங் ஆரம்பித்தேன். மணி 5:55 ஆகியிருந்தது.

ஞாயிற்றுக் கிழமை தவிர எல்லா நாளுமே நானும் சந்துருவும் இங்கு ஓடுவோம். இங்கிருந்து கரையில் ஓடி ஆர்ட்ஸ் காலேஜ் தாண்டி வீரபாண்டியபட்டிணம் வரை ஓடுவோம், பின்னர் அதே வேகத்தில் திரும்பி வர வேண்டும். திரும்பி வரும் போது கடைசி நூறு மீட்டரை கூடுதல் வேகத்தில் கடக்க வேண்டும். பல முறை அந்த இறுதி 100மீ தூரத்தில் சந்துரு என்னை முந்தியிருக்கிறான். ஏனோ எல்லாம் நினைவுக்கு வந்தது. இந்தக் கடற்கரையில் இதுவே கடைசி ஜாகிங்.
வீரபாண்டியபட்டிணம் வரை போய் திரும்பி வந்தேன். கடைசி 100மீ எப்போதும் போல் வேகமாய் ஓடினேன். விரைவான ஓட்டமும், காலை வெயிலும் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகளை வழியச் செய்தன. ஈஸ்வரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். ஷூ-வைக் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தேன். ஈஸ்வரனும் நானும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அம்மா வந்து கேட்டார், "ரூம எப்படா காலி பண்ணுறீங்க?"
"நான் நாளை கிளம்பறேன்மா" என்றேன்.
"எங்கே ஊருக்காடா?"
"இல்லம்மா, நாளைக்கு சாயுங்காலம் முத்துநகர்-ல சென்னை போறேன்மா"
"போயி எங்கேடா தங்கப் போற?"
"நம்ம சந்துருவோட அண்ணன் சென்னைல ரூம் எடுத்துத் தங்கியிருக்கார்மா, அங்க தான் தங்கப் போறேன்"
"முத்துநகர்-ல டிக்கெட் கெடச்சுருச்சாடா?"
"இல்லம்மா, டிக்கெட் எல்லாமே புக் ஆயிடுச்சு, அதனால அன்-ரிசர்வ்ட்-ல தான் போறேன்மா"
நான் சொல்வது பொய் என்று அவருக்கு நல்லாவே தெரியும், நான் அன்-ரிசர்வ்ட்-ல போறதுக்குக் காரணமும் தெரியும்."சரிம்மா, நேரம் ஆயிடுச்சி, எக்ஸாமுக்குப் போகனும், நான் வர்றேன்மா"
விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

வீட்டுக்கு வந்த போது மணி சரியாக 07:00.
ராம் மட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான்.
சந்துரு கேட்டான்,"டீ குடிச்சுட்டு வரலாமாடா?"
சரி என்று சொல்லிவிட்டு ராமையும் எழுப்பினேன்.
எல்லாரும் கிளம்பி அரட்டை அடித்துக் கொண்டே டீ குடித்து விட்டுத் திரும்பிய போது மணி 07:25 . வழக்கமாக டீ குடிக்கப் போகும் போது எங்களிடம் இருக்கும் உற்சாகம் ஏனோ இந்த முறை அரட்டையின் போது குறைந்திருந்தது.

வீட்டு சொந்தக்காரர் கீழேயிருந்து அழைத்தார், "முத்துவேல், உனக்கு ஃபோன்"
கீழே போனேன். என் தங்கை தான்.
பேசிவிட்டு மேலே சென்றேன். சந்துருவின் பார்வையில் இருந்த கேள்வி புரிந்தது.
"தங்கச்சி தான்டா, அப்பா 1000 ருபாய் குடுத்தாராம், அத இன்னிக்கு
11:00 மணிக்கு ஐஸ் வீட்டுல குடுத்துடுவாளாம்", என்றேன்.
"நல்ல வேளை, உங்கப்பா இப்பவாவது மனசு மாறினாரே" என்றான். அவன் முகத்தில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு….

பாகம் இரண்டில் தொடரும்.....

Sunday, January 20, 2008

Evolution Vs Mutation

இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது...



நேற்று வழக்கம் போல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். (சமையல் தாங்கோ...) அப்போது குயில் என்னை அலைபேசியில் அழைத்தான். சிறிது நேரம் நலம் விசாரித்து விட்டு அந்த சந்தேகத்தைக் கேட்டான்.
"மாம்ஸ், ம்யூட்டேஷனுக்கும்(Mutation) எவோலுஷனுக்கும் (Evolution) என்னடா வித்யாசம்"

"திடீர்னு ஏன்டா இந்தக் கேள்வி" நான் கேட்டேன்.

"இல்ல மாமா, எங்கேயோ படிச்ச ஞாபகம், உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்டா"

"சரிடா உனக்கு ஒரு உதாரணத்த வச்சு சொல்லுறேன், புரியுதான்னு பாரு"
"சரி சொல்லு மாம்ஸ்"

“உனக்கு நம்ம குடிகாரன் ஞாபகம் இருக்கு இல்லையா, அவனப் பாரு, ஃபர்ஸ்ட் இயர்ல ரொம்ப அப்பாவியா ஒரு சோடா புட்டி கண்ணாடியப் போட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு அலைவான். அந்த சமயத்துல அவன் இந்த அளவுக்கு மோசமா வருவான்னு யாரும் துண்டப் போட்டு தாண்டினாலும் நாம நம்பியிருப்போமா? ஆனா இப்போ உண்மையக் கண்ணால பாக்கிறோம், இதுக்குப் பேரு தான் எவோலுஷன். ரொம்ப ரொம்ப மெதுவா நடந்தது இல்லையா அவனோட மாற்றாம், அது மட்டுமில்லாம அவன் என்னைக்கு இப்படி மாறினான்னு யாராலயும் சொல்ல முடியாது
உயிர் நன்பனோட அப்பா இறந்ததுக்குக் கூட அவன் வரலை, ஆனா நெனச்சா வந்திருக்கலாம். இது மாதிரி ரொம்ப மெதுவா ஆனா உறுதியா நிகழ்கிற மாற்றத்துக்குப் பேரு தான் எவோலுஷன். அந்த மாற்றம் நிகழ்றத நம்மால உணர முடியாது. மாறிப் போனத மட்டும் தான் உணர முடியும்."

"சரி ம்யூட்டேஷன் பத்தி சொல்லு மாம்ஸ்"

"சரி, இப்போ இன்னொரு பையன எடுத்துக்கோ, அவன் 2007 டிசம்பர் 24 வரைக்கும் இருந்த நிலை வேற, அதுக்கு அப்புறம் இருந்த நிலை வேற. இதுக்கு முன்னாடி நைட்டு 11:30 மணிக்கு தான் சங்கத்திலேருந்து அவங்க வீட்டுக்குக் கிளம்புவான். ஆனா இப்போ, 10:15 கூட ரொம்ப லேட் ஆகிப் போச்சுனு சொல்றான். அது கூட பரவாயில்ல ஆண்டுக்கு ஒரு தடவை சங்கத்துல எல்லாரும் நம்ம தூத்துக்குடி கடற்கரையில சந்திக்கலாம்னு இருந்தா அந்த நாயி ஒரு மொக்கை காரணத்த சொல்லி வராம இருந்தான், அன்னிக்கு அந்த ஒரு நாறப்பயலத் தவிர எல்லோரும் இருந்தோம். அவனுக்கு 2007ல இப்போ தான் எல்லா நன்பர்களையும் பார்க்க வாய்ப்புன்னு தோனுச்சுன்னா வந்திருப்பான் இல்லையா. இது கூட பரவாயில்லை, நன்பர்கள் எவ்வ்ளோ சொல்லியும் சிக்கன் சாப்பிடாத நாயி, அன்னிக்கு மட்டும் "ஐ லவ் சிக்கன்"-னு டையலாக் விட்டு சாப்பிட்டிருக்கான். வீட்டுக்காக ஒரு வேலை செய்வானா இவன்? இப்போ என்னடான்னா நெல்லிக்காய் வாங்கிக் கொடுக்குறான், பாவாடை நாடா கோர்த்துக் கொடுக்குறான், லைனிங் க்ளாத் வாங்கிக் கொடுக்குறான், ஆனா எதையுமே அவனோட வீட்டுக்குப் பண்ணலை இந்த மாதிரியான மாற்றத்துக்குப் பேரு தான் ம்யூட்டேஷன். ஒரு குறிப்பிட்ட காரணத்தால உடனடியா நடக்கிற மாற்றம் தான் அது. அது எப்போ நடந்ததுன்னு தெளிவாவே தெரியும், காரணமும் எல்லாராலும் உணர முடியும்.

"இப்போ வித்யாசம் புரிஞ்சுதாடா?"

"ரொம்பத் தெளிவாவே புரிஞ்சுது, இது மாதிரி அடிக்கடி சந்தேகம் கேக்கிறேன், நீயும் இது மாதிரியே அடிக்கடி தீர்த்து வையி. நான் நளைக்கு கூப்பிடுறேன்"

தொடர்பு துண்டிக்கப்பட்டது.